இறக்குவானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசம் ஒன்றில் தனது காதலனுடன் விடுதியில் தங்குவதற்காகச் சென்ற 22 வயதான யுவதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நேற்று புதன்கிழமை (05) பகிரங்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த யுவதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்தபோதும் யுவதி தூக்கிட்டுத் தற்கொலை செய்ததாக அவரது காதலன் கூறியுள்ளார்.
இதனையடுத்து, கஹவத்தை சட்ட வைத்திய அதிகாரி எம்.டி.எம்.எஸ்.கே. திஸாநாயக்க நேற்றைய தினம் தனது தீர்மானத்தை பகிரங்கமாக தெரிவித்து யுவதியின் உடலுறுப்புகள் மேலதிக பரிசோதனைக்கு அனுப்பப்படும் என கூறினார். இந்நிலையில் பிரேத பரிசோதனை கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது.
இறக்குவானையைச் சேர்ந்த பிரதீபா என்ற இந்த யுவதியின் மர்ம மரணம் தொடர்பில் இறக்குவானை பதில் நீதிவான் சரத் விஜயகுணவர்தனவின் உத்தரவில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
உயிரிழந்த யுவதி, கடந்த 4 ஆம் திகதி பகல் மாதம்பே பனாவல வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றுக்கு தனது காதலனுடன் சென்று அங்கு அறையொன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தமை பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே காதலன் என பொலிஸார் தெரிவித்தனர்.
அன்றிரவு தனது காதலி தன்னிடம் பசியாக இருப்பதாக கூறியதாகவும், உணவு கொண்டு வருமாறு தனது வங்கி அட்டையை தன்னிடம் கொடுத்ததாகவும் காதலன் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பின்னர் தான் ஹோட்டல் அறைக்கு வந்தபோது கதவு மூடப்பட்டிருந்ததாகவும், தனது காதலி கதவைத் திறக்காததால், அப்போது ஹோட்டலுக்குப் பொறுப்பாக இருந்த பெண்ணிடம் தெரிவித்ததாகவும் காதலன் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து, அறையின் பின் பகுதிக்குச் சென்று அங்குள்ள ஜன்னலை உடைத்து அறைக்குள் நுழையுமாறு அந்த பெண் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி ஜன்னலை உடைத்து அறைக்குள் நுழைந்த அவரது கதலன், தனது காதலி தான் அணிந்திருந்த உடையின் ஒரு பகுதியை பயன்படுத்தி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் காணப்பட்டதாகக் கூறியுள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏலவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கூறியதாகவும் உயிரிழந்த யுவதியின் காதலன் தெரிவித்துள்ளார்.