சர்வதேச நாணய நிதியத்தின் 2ஆம் கட்ட கடன் தொகையை செப்டெம்பரில் பெற்றுக்கொள்ள முடியும் : ஷெஹான் சேமசிங்க!

இலங்கை வெளிப்படை தன்மையுடன் செயற்பட்டு வருவதால் பிரதான கடன் வழங்குநர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளது. செப்டெம்பரில் சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வுக்கு முன்னர் உள்நாட்டு, வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்களை மேற்கொண்டு இரண்டாம் கட்ட கடன் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தேசிய மற்றும் சர்வதேச கடன் மறுசீரமைப்புக்கள் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும்போது இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஓய்வூதிய நிதியம் மற்றும் வங்கிகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் 25ஆம் திகதியளவில் இணக்கப்பாட்டை எட்ட எதிர்பார்த்துள்ளோம். இதற்காக அவர்களுக்கு இரு தெரிவுகள் வழங்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் நிதி அமைச்சு, மத்திய வங்கி மற்றும் நிதி ஆலோசனைக்குழுவால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தேசிய கடன் மறுசீரமைப்புக்கு சமாந்தரமாக, சர்வதேச கடன் மறுசீரமைப்புடன் தொடர்புடைய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் என்பன தலைமைத்துவத்தை ஏற்று வொஷிங்டனில் சர்வதேச நாணய நிதிய மாநாட்டின்போது பொதுக் களமொன்றை உருவாக்கின. அந்தக் களத்திலும், பரிஸ் கழக செயலகத்திலும் கடன் வழங்குநர்களுடன் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை வெளிப்படை தன்மையுடன் செயற்பட்டு வருவதால் பிரதான கடன் வழங்குநர்களிடமிருந்து சாதகமான பதில்களே கிடைத்துள்ளன. அதற்கமைய எதிர்வரும் செப்டெம்பரில் சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வுக்கு முன்னர் உள்நாட்டு, வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்களை மேற்கொண்டு இரண்டாம் கட்ட கடன் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகின்றோம்.

அதற்கமைய சர்வதேச தரப்படுத்தல்களிலும் இலங்கை முன்னேற்றமடையும் வாய்ப்புக்கள் ஏற்படும். பணவீக்கத்துக்கு சமாந்தரமாக கொள்கை வட்டி வீதங்கள் குறைக்கப்படுவதன் நன்மை தற்போது மக்களை சென்றடைய ஆரம்பித்துள்ளது. இனிவரும் காலங்களில் வட்டி வீதங்கள் மேலும் குறைவடையும். அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய பொருளாதார கொள்கை காரணமாக அந்நிய செலாவணி இருப்பு 3.5 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது என்றார்.