தந்தை செல்வாவின் ஒற்றுமை எண்ணம் தற்போது தமிழ் தேசியப் பரப்பில் இருக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் வரவேண்டும். அனைவரும் ஒற்றுமையாகத் தமிழ் மக்களின் குரலாகப் பாடுபட வேண்டும். தந்தை செல்வாவின் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் இந்த நாட்டில் யுத்தமும் ஏற்பட்டிருக்காது, இன்றைய பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டிருக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 45வது ஆண்டு நினைவு நிகழ்வில் கல்ந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு மத்தியிலே நாங்கள் இன்றைய தினம் தந்தை செல்வா அவர்களை நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக அடக்கி ஒடுக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையிலே தமிழ் மக்களுக்கான தலைமையைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தந்தை செல்வா அவர்கள் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார். இலங்கை மக்களுக்கு சமஸ்டி ஆட்சி முறையே வேண்டும் என்பதனைக் கருத்திற் கொண்டு இக்கட்சியை அவர் சமஸ்டிக் கட்சியாகவே உருவாக்கியிருந்தார்.
இருந்தும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்று தான் விட்டு வந்த தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரை அணுகி 27 வருடங்களின் பின்னர் ஜி.ஜி.பொன்னம்பலம் மற்றும் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களையும் இணைத்து தமிழர்களுக்குரிய தீர்வு தமிழ்ஈழம் தான் என வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை உருவாக்கியிருந்தார். அந்த அவரது ஒற்றுமை எண்ணம் தற்போது தமிழ் மக்களிடையே ஏற்பட வேண்டிய ஒரு நிலைமை இருக்கின்றது.
அதே ஒற்றுமையின் நிமித்தம் 2001ம் ஆண்டு போராட்ட இயக்கங்கள், மிதவாதக் கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்றம் பெற்றது. அதே ஒற்றுமையுடன் 2004ம் ஆண்டுத் தேர்தலிலே 22 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த கட்சி 2009ற்குப் பின்பு சிதறுண்டு இருக்கின்றது. தந்தை செல்வாவின் எண்ணம் தமிழ்தேசியப் பரப்பில் இருக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் வரவேண்டும். அனைவரும் ஒற்றுமையாகத் தமிழ் மக்களின் குரலாகப் பாடுபட வேண்டும்.
இன்று இலங்கை மக்கள் பொருளாதார ரீதியில் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கின்றார்கள். ராஜபக்ச சகோதரர்கள் அனைவரும் இந்த அரசை விட்டு வெளியேற வேண்டும், ஜனாதிபதி வெளியேற வேண்டும் என்ற கோசங்கள் சிங்கள இளைஞர்கள் மத்தியில் மிக வேகமாகப் பரவி வருகின்றது. இந்தப் பொருளாதார வீழ்ச்சி எவ்வாறு வந்தது என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
தந்தை செல்வா அவர்கள் 1957ம் ஆண்டு பண்டாரநாயக்காவுடன் ஏற்படுத்திய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இந்த நாட்டில் ஒரு போர் மூண்டிருக்காது. அதனைத் தொடர்ந்து மாறி மாறி வந்த அரசாங்கங்கள்; போருக்காக அதிகமான பணத்தைச் செலவழித்திருக்க மாட்டாது. ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்கள் 1977ம் ஆண்டு ஜனாதிபதியாக வந்த பிற்பாடு போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் எனக் கூறி மிகப் பெரிய போருக்கு வழிகொடுத்திருந்தார் அவரைத் தொட்டு வந்த ராஜபக்ச சகோதரர்கள் மிகவும் உக்கிரமான போரை நடத்தியிருந்தார்கள். அதற்கு பில்லியன் கணக்கில் நிதியினைப் பயன்படுத்தியமையே பொருளாதார நெருக்கடிக்கு முதல் முக்கிய காரணமாகும்.
அதற்கும் மேலாக 2005 தொடக்கம் 2015 வரையான மஹிந்தவின் ஆட்சிக் காலத்திலே போருக்கு மேலதிகமாக மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்ட துறைமுகம், ராஜபக்ச விளையாட்டரங்கு, தாமரைத் தடாகம் போன்ற தேவையற்ற வருமானம் இல்லாத முதலீடுகளை கூடுதலான வட்டியில் கடன்களைப் பெற்று அதன் மூலம் அவர்களுக்குத் தரகுகளைப் பெற்று மேற்கொண்டதன் நிமித்தமும் இந்தப் பொருளாதாரப் பிரச்சனை இந்த அளவிற்கு அகோரமாக வந்திருக்கின்றது.
இவ்வாறான நிலைமைகளில் இருந்து மீள வேண்டுமாக இருந்தால், இந்த நாட்டில் மீண்டும் போர் ஏற்படாமல் பொருளாதார இழப்புகள் மேலும் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால் ராஜபக்ச சகோதரர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று போராடும் தற்போதைய தலைமுறையினர் இலங்கையின் இனப்பிரச்சனைக்கான ஒரு நிரந்தரத் தீர்வையும் ஏற்படுத்துவதற்குப் போராட முன்வர வேண்டும்.
இன்று ராஜபக்ச ஆட்சியில் இருந்து அதிருப்தியாளர்கள் பலர் வெளியேறியிருக்கின்றார்கள். இந்த அரசுக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமும் கொண்டு வரப்பட இருக்கின்றது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெற்று ஆட்சி மாற்றமொன்று எற்படுமாக இருந்தால் இந்த நாட்டை ஆளப்போவது யார் என்பதை சிந்திக்க வேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாமலாக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு முழு அதிகாரமும் வந்தால் அந்த அதிகரம் முழுவதும் பிரதமருக்கு வரும். தற்போதைய நிலையிலே ராஜபகச் சகோதரர்களுடன் இருந்து அதிருப்தியில் வெளியேறிய உறுப்பினர்களில் இருந்து ஒருவர் பிரதமராக வந்தால் நிலை எவ்வாறு இருக்கும்.
தற்போது ஒரு கதை பரவுகின்றது. இந்த அதிருப்தியாளர்கள் அனைவரும் சேர்ந்து விமல் வீரவன்சவிற்குப் பிரதமர் பதவியைக் கொடுப்பதற்குத் தீர்மானித்திருப்பதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. விமல் வீரவன்ச எப்படிப்பட்டவர் என்பதை கடந்த கால அனுபவங்கள் நமக்குக் கூறும். விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் மிக மோசமாக இனத்துவேசம் பேசுபவர்கள். அவர்களிடம் ஆட்சி சென்றால் எண்ணெய்ச் சட்டிக்குள் இருந்து துள்ளி நெருப்புக்குள் விழுந்த நிலைமையாக எமது நிலை வரக்கூடாது.
இந்த நிலைமைகளில் தமிழ் மக்கள், தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாங்கள் என்ன செய்ய வேண்டும். தமிழ் மக்களின் நலன் சார்ந்து எப்படியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார்.