போதையால் மாறும் பாதை..!


போதைப் பொருளுக்கு அடிமையாதல் மற்றும் அதனுடன் தொடர்பான ஏராளமான பிரச்சினைகளுக்கு இலங்கை முகங்கொடுத்து வருகிறது. எம் மக்களின் மத்தியிலே நல்லவற்றைவிடத் தீய விடயங்களால் அதிகம் ஈர்க்கப்படுகின்ற எழுதப்படாத ஒரு விதிமுறை காணப்படுகின்றது.

அதாவது, நல்ல மாற்றங்களை விடவும் தீய மாற்றங்களையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். இலங்கையில் முதல் முதலாகத் திறந்த பொருளாதாரக் கொள்கை, உல்லாசப் பயணிகளின் வருகை போன்ற காரணிகள் நவீன போதைப் பொருட்கள் நாட்டினுள் பிரவேசிக்க வழிவகுத்தன.

எம் நாட்டில் போதைப்பொருள் பாவனையாளர்கள் 1920களிலேயே முதலில் அடையாளங் காணப்பட்டிருந்ததாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 1980களில் போதைப்பொருள் பாவனையை ஒரு வளர்ந்து வரும் பிரச்சினையாக இலங்கை அரசு முகங்கொடுக்க ஆரம்பித்தது.

தற்காலத்தில் பள்ளி மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை மது, புகையிலை, சிகரெட், கஞ்சா போன்றவற்றுக்கு அடிமையாகி, தமது எதிர்கால வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி வருகின்றனர். எமது நாட்டினைப் பொறுத்தவரைக்கும் குச்சொழுங்கையில் இருந்து முச்சந்திவரை போதைப் பொருட்களுக்காகவே ஒரு பகுதியினர் கூடிக் கலைகின்றனர்.

இன்றைய சமுதாயம், எம்முடைய மூத்தோரினுடைய பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் அனைத்தையும் தொலைத்துவிட்டு, எங்கிருந்தோ வருகின்ற அநாகரீகங்களைப் பின்பற்றி நாகரீக வளர்ச்சி என்ற பெயரிலே போதைப்பொருள் பாவனையினால் அவர்தம் வாழ்வை அபாயகரமாக்கிக் கொண்டு செல்கின்றனர்.

இப் போதைப்பொருட்களின் பாவனை உச்சி முதல் உள்ளங்கால் வரை உடலின் அநேக பகுதிகளைப் பாதிப்பிற்கு உள்ளாக்குகின்றது என்பதை இவர்களில் பலரும் உணர்வதில்லை. இதன் பயன்பாட்டினால் ஈரல் நிரந்தரமாகப் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், உடலின் புரதத்தொகுப்பு, நஞ்சகற்றல் தொழிற்பாடு என்பன பாதிக்கப்படுவதோடு,சிறுநீரக நோய், குடற் புண்கள், இரத்தவாந்தி, புற்று நோய், தசையழற்சி எனப் பலகொடிய நோய்களின் தாக்கத்திற்கும் உள்ளாகும் நிலை ஏற்படுகின்றது.

மேலும், மலட்டுத் தன்மை போன்ற பாலியல் ரீதியான பிரச்சினைகளும் இதனால் உருவாகுகின்றன. இது மட்டுமன்றி உளச்சோர்வு, நித்திரையின்மை, மனவழுத்தம், குடும்ப வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள், பொருளாதாரப் பின்னடைவு, வீதி விபத்துக்கள், குடும்ப உறவுகள் அநாதரவாகும் நிலை போன்றனவும் போதைப்பொருட்களின் பாவனையினால் உண்டாகும் துன்பியல்புகளாகும்.

ஒருவர் மதுப் பழக்கத்தைக் கொண்டிரா விட்டால் அவரை ஏளனமாகப் பார்ப்பதும், ஒதுக்குவதும் தாழ்த்திப் பேசிக் கிண்டல் செய்யும் நிலையும் அண்மைக் காலத்தில் பரவலாகக் காணப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல், பிறந்தநாள் மற்றும் விசேட, மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளிலும் மரணச் சடங்கு உள்ளிட்ட துக்கச் சம்பவங்களின் போதும் மதுவைப் பயன்படுத்துதல் ஒரு பாரம்பரியமாக மாறிவருகின்றது. இது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

ஆண்களும் பெண்களும் என இரு பாலினரும் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர். ஓடியாடி இளமைப் பருவத்தினைக் கழிக்க வேண்டிய இன்றைய இளம் சமுதாயம் இப் போதையின் பாவனையால் மூலையில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தோடு, இதற்கு அடிமையான சிலர் பணம் இல்லாத நிலையிலே களவு, கொலை, வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபடுகின்றமையும் கவலைக்கிடமான ஒன்றாகும்.

மேலும், போதைப்பொருள் பாவனையினால் குடும்பத்தில் சண்டை மற்றும் அயலவரோடு சண்டை, பாலியல் துஷ்பிரயோகம் போன்றனவும் நடைபெறுகின்றன. உதாரணமாக, புங்குடுதீவு மாணவி வித்தியா வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட துர்ப்பாக்கியச் சம்பவத்தில் குற்றவாளிகளின் போதைப்பொருள் பாவனையும் ஒரு முக்கிய காரணமென விசாரணையில் கண்டறியப்பட்டது.

மேலும், பல பெண்களும் சிறுமிகளும் இதேபோன்ற போதைவஸ்துக்கு அடிமையானவர்களால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நாடளாவிய ரீதியிலும் நிகழ்ந்துள்ளன.

1989ம் ஆண்டில் இருந்து ஆனி மாதம் 26 ஆம் திகதியைச் சர்வதேசப் போதைப்பொருள் ஒழிப்புத் தினமாக ஐ.நா பிரகடனப்படுத்தியுள்ளது. இலங்கை அரசும் குறிப்பிட்ட வாரத்தைப் போதைப்பொருள் ஒழிப்புவாரமாகப் பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசாங்கம் இப் போதைப் பொருட்பாவனையினைக் கட்டுப்படுத்தும்; முகமாகப் பல்வேறு சட்டதிட்டங்களை உருவாக்கி வருகின்றபோதிலும் அவை பெரியளவில் வெற்றியளிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

போதைப்பொருள் பாவைனையிலே மேல் மாகாணம் முதலிடத்தில் இருந்து வருகின்றது. அண்மைக் காலங்களில் வடக்கு மாகாணத்திலும் போதைப்பொருள் பாவனையானது அதிகரித்துக் காணப்படுகின்றது எனவும், இப் பாவனையாளர்களில் 50 சதவீதமானவர்கள் திருமணமாகாத இளைஞர்கள் எனவும், அதில் 69 சதவீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் எனவும் சுகாதார அமைச்சின் அண்மைய அறிக்கை கூறுகின்றது. போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பல மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகுகிறார்கள் எனவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

'மது மற்றும் போதைப்பொருள் பாவனையால் மூளைக்கு உண்டாகும் தாக்கத்தினால் ஏற்படும் பிரதிபலிப்பாக, கதைக்கும்போது தடுமாற்றம் ஏற்படல், பார்வைக் கோளாறு, தவறான தீர்மானம், அதிக கோபம் போன்ற உளநலச் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளன. கர்ப்பிணிகள் மதுபானம் அருந்துவதால் பிறக்கும் குழந்தைகள் விகாரமடைந்து அங்கவீனமடையும் நிலையும் ஏற்படுகின்றது 'எனப் புதுக்குடியிருப்புப் பொது வைத்தியசாலை வைத்தியரான பிரியதர்சினி சாந்தகுமார் குறிப்பிடுகிறார்.

போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த சட்டங்களைக் கடுமையாக நடைமுறைப்படுத்துவதுடன் மேலும், புதிய சட்டங்களை உருவாக்கி அவற்றினைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்தல் அவசியம்.

தேசிய வேலைத்திட்டத்தினை உருவாக்கி கிராமந்தோறும் அதனை அமுல்படுத்த வேண்டும். இவ்வாறான செயற்திட்டங்கள் மூலமே போதைப் பொருளுக்கு அடிமையான எமது சமூகத்தினை அதில் இருந்து விடுவிக்க முடியும்.

1984ஆம் ஆண்டிலிருந்து தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் இலங்கையிலிருந்து போதைப்பொருள் பாவனையை ஒழிக்கும் நோக்கில் செயற்பட்டு வருகின்றது. இது, போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவது மாத்திரமல்லாமல் போதைப்பொருள் பாவனையில் இருந்து நபர்களை மீட்டு மறு வாழ்வளிக்கும் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றது. ஒரு தேசத்தை அல்லது ஒரு சமுதாயத்தை அல்லது ஒரு தனிநபரைத் திட்டமிட்டு நசுக்கிவிட ஏவப்படுகின்ற ஓர் ஆயுதந்தான் போதைப்பொருள். தினமும் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வெவ்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் கடத்தல்கள் நடைபெறுகின்றன.

போதைக்கு அடிமையானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கி, மறுவாழ்வு அளிக்க வேண்டும். போதைப்பொருள் விற்பனையைத் தடை செய்தால் மட்டுமே இவ்வாறான அடிமைத்தனங்களைத் தடுக்க முடியும். எவ்வாறாயினும், மனித மனங்களில் சீர்திருத்தங்களையும் நல்ல எண்ணங்களையும் உருவாக்குவதே இதற்கு ஆரோக்கியமானதும் நிரந்தரமானதுமான தீர்வாகஅமையும்.

உ.நிந்தனா
ஊடகக்கற்கைகள் துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்