Batticaloa Campus பட்டம் வழங்கும் பல்கலையாக ஏற்கப்படவில்லை : பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு

மானிய ஆணைக்குழு கோப் குழு முன் அறிவிப்பு 

Batticaloa Campus தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக் கூடிய பல்கலைக்கழகமாக ஏற்றுக் கொள்ளவில்லையென பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு நேற்று கோப் குழுவில் தெரிவித்தது.  பெற்றி கெம்பஸ் தொடர்பில் நேற்று கோப் குழுவில் விசாரணை நடைபெற்றது.இதன் போது பெற்றி கெம்பஸ் மற்றும் ஹீரா மன்ற ஸ்தாபகர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அவரின் புதல்வர் ஹிராஸ் ஹிஸ்புல்லா ஆகியோர் பிரசன்னமாகியிருக்கவில்லை. வெளிநாட்டு தூதுக் குழுவொன்றை சந்திப்பதற்காக வெளிநாடு செல்வதாக அவர்கள் கோப் குழுவுக்கு அறிவித்திருந்தனர்.   இந்த நிலையில் உயர்கல்வி அமைச்சு அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். 

கோப் குழு கூட்டம் அதன் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தியின் தலைமையில் நடைபெற்றது. 

இங்கு கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அதிகாரிகள்,பெற்றி கெம்பஸ் தொடர்பில் மேற்கொண்ட மீளாய்வின் பின்னர் பட்டம் வழங்கும் நிறுவனமாக இதனை ஏற்காதிருக்க முடிவு செய்ததாக குறிப்பிட்டனர்.  

முதலீட்டுச் சபையில் ஒரு பெயரில் பதிவு செய்திருக்கையில் அது வேறு பெயரில் செயற்பட அனுமதிக்க முடியாது என்றும் அதிகாரிகள் கூறினர். ஹீரா மன்றம் முதலீட்டு சபையுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் சட்டபூர்வமற்றது என்று சட்ட மா அதிபர் அறிவித்துள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.   அப்போதைய பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் தான் பெற்றி கெம்பஸ் நிறுவனத்தை பதிவு செய்வது தொடர்பான யோசனை சமர்ப்பிக்கப் பட்டுள்ளது எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

2015ஜூன் 26திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கோப் குழு தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி இங்கு கேள்வி எழுப்பினார்.   பெற்றி கெம்பஸின் பெயரில் 14வங்கிக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் 4பில்லியன் ரூபா பரிமாறப்பட்டுள்ளதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.   இதேவேளை முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அவரின் புதல்வர் ஆகியோருக்கு எதிர்வரும் ஒக்டோபர் 09ஆம் திகதி கோப் குழுவில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டது.