ஒப்பந்தக்காரர் வீடொன்றிலிருந்து 59 பவுண் தங்க நகைகளும் 4 இலட்சம் ரூபா பணமும் நேற்றிரவு கொள்ளை

வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோளாவில் பிரதேசத்தில் ஒப்பந்தக்காரர் வீடொன்றிலிருந்து 59 பவுண் தங்க நகைகளும் 4 இலட்சம் ரூபா பணமும் நேற்றிரவு(29) கொள்ளையிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் கோளாவில் விக்னேஷ்வரர் ஆலய முன்வீதியில் உள்ள வீடொன்றில் நடைபெற்றுள்ளதென முறைப்பாடு பதிவு செய்யப்பட்டள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் நடைபெற்றபோது வீட்டில் யாரும் இருக்கவில்லை எனவும் அனைவரும் அருகில் உள்ள ஆலய திருவிழாவிற்கு சென்றிருந்தபோதே இக்கொள்ளை இடம்பெற்றுள்ளதாகவும் வீட்டின் உரிமையாளர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

வழமை போன்று வீட்டில் உள்ள அலுமாரி ஒன்றில் நகைகளையும் பணத்தினையும் வைத்து விட்டு அருகில் இருந்த ஆலயத்திற்கு அவர்கள் சென்றுள்ளனர்.

இதனை சாதகமாக பயன்படுத்திய யாரோ சிலர் வீட்டின் உள்ளே நுழைந்து நகையினையும் பணத்தையும் கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளனர்.

ஆலயத்திற்கு சென்று வந்த வீட்டின் உரிமையாளர் கதவை திறந்து பார்க்கையில் களவாடப்பட்ட நகையின் சிறிய நகையொன்று மண்டபத்தினுள்ளே விழுந்து கிடந்ததை அவதானித்துள்ளார்.

இதன் பின்னர் நகை இருந்த அறையை திறந்து பார்க்கையிலேயே நகையும் பணமும் திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்ததுடன் இன்று காலை பொலிசாருக்கு தகவலை வழங்கியுள்ளார்.

கிடைத்த தகவலின் அடிப்படையில் அக்கரைப்பற்று பொலிசார் அம்பாரையில் இருந்து வருகை தந்த விசேட தடவியல் பொலிசாருடன் இணைந்து கொள்ளையிடப்பட்ட வீட்டிற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை அலையடிவேம்பு பிரதேசத்தில் கள்வர்களின் நடமாட்டம் அன்மைக்காலங்களில் அதிகரித்து வருவதாக மக்கள் தெரிவித்துள்ள நிலையில் இச்சம்பவத்தின் பின்னர் ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் மத்தியில் அச்சம் தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.