கிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்


ஆர்.சயனொளிபவன்  -  

  • ரணிலின் இரண்டாவது சதித்திட்டமா ?    
  •  ரணில் , மனோவின் திட்டம் வெற்றியளிக்குமா ?

மனோ கணேசன் என்றவுடன் மக்கள் மனதில் நினைவிற்கு வருவது இவர் தமிழ் மக்களுக்காக எதையும் செய்வார் என்பதுதான் அது மலையகத்தில் வாழும் தமிழ்  மக்கள் என்றாலும் சரி வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் என்றாலும் சரி இவரை ஒரு உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கின்றார்கள் இந்த  கட்டுரையில் நாங்கள் மனோ கணேசனின் மறுபக்கத்தை காலத்தின் கட்டாயத்தால் பதிவேற்றுகின்றோம்.

கொழும்பை மையமாக கொண்டு அரசியல் பயணம் செல்லும் ஜனநாயக மக்கள் முன்னனி முக்கியமாக கொழும்பு கம்பஹா களுத்துறை மாவட்டங்களை மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்டு பின்னர்  பிற மாவட்டங்களான கண்டி, இரத்தினபுரி மாத்தளை போன்ற மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டு கடந்த உள்ளுராட்சி  தேர்தலில் வவுனியா வரை சென்றுள்ளனர். கொழும்பு தவிர்ந்த ஏனைய இடங்களில் மலையக மக்களை மையமாக கொண்டு அவர்களின் நலன்களை பாதுகாப்பதற்கும்  அத்தோடு அவர்களின் வாழ்க்கை  மேம்பாட்டிற்கும்  உழைக்கும் நோக்குடனும் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சி என்று தம்மை நியாயப்படுத்துகின்றனர் 

ஆனால் இக்  கட்சியானது காலத்திற்கு காலம்  பின்னடைவுகளை சந்திப்பதிலும்  பின்நிற்கவில்லை
  • ஒரு அரசியல் கட்சியாக இருந்தும். கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் காலத்திற்கு காலம் விலகி செல்லும் ஒரு கட்சியாகவும், அதன் தலைவர் மனோ கணேசன் முக்கியமாக இக் கட்சியை ஒரு தனி மனித கட்சியாக நடாத்த முயற்சிக்கின்றார் என்பதும் , மற்றைய அரசியல் கட்சிகள் போல ஒரு வெளிப்படைத்தன்மை அற்ற அதிகார பரவல் உள்ள ஒரு கட்சிபோல் இயங்காமையும், அத்தோடு குடும்ப ஆதிக்கம் உள்ள ஒரு கட்சியாகவும் தென்படுகின்றது
  • .கட்சிக்காக உழைக்கும் தொண்டர்கள் உள்வாங்கப்படுவதில்லை என்ற ஒரு பெரும் குற்றச்சாட்டு பெரும் அளவில் எழுவதையும் காணக்கூடியதாக உள்ளது. கடந்த உள்ளூராட்சி   தேர்தலின் பின்பும் கட்சிக்காக பாடுபட்ட இளைஞர்களின் அதிருப்தியை  ஊடகங்களின் ஊடாக காணக்கூடியதாக இருந்தது. இவருடைய  கட்சித்தொண்டர்கள் கடந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் இவருடைய இருண்ட நாட்களில்  இவரை தோளில்  சுமந்து சென்றவர்கள் என்பதும்  இவருக்காக தமது வாழ்வில் பல அற்பணிப்புகளை செய்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆனால் அதேவேளை  அவர்கள் முறையாக கவனிக்கப்படுவதில்லை என்ற குற்றசாட்டு எழுந்தவண்ணமே உள்ளது .



கடந்த தேர்தலில் மனோ கணேசன் உடைய வெற்றியை பார்ப்போமானால் அவர் ஐக்கிய தேசிய முன்னணியில் கடந்த தேர்தலில் களமிறங்கி அவருக்கும் ரோஸி சேனநாயாயக்காவிற்கும் இடையே ஏற்பட்ட பெரும் இழுபறிக்கு பின்பு இந்த முன்னணியின் கடைசி பாராளுமன்ற உறுப்பினராய்  கொழும்புமாவட்டத்தில் இருந்து தெரிவாகினார். அதே போன்று ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் அமைத்த போது இவருக்கு இன ஐக்கிய அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பை பொறுத்தளவில் இவருடைய வெற்றிக்கு கொழும்பு வாழ் வடக்கு கிழக்கு மக்களின் வாக்கு முக்கியமாக இருந்தது அதே போன்று கண்டியில் இவருடைய கட்சியின் சார்பாக  ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதனைவிட இவருடைய கட்சி மற்றைய மாவட்டங்களிலும்  களமிறங்கியும்  முயற்சி வெற்றியளிக்கவில்லை

மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியானது   முதலாவதாக அவர்களுக்கு  வாக்களித்த மக்களின் நலன்களை கவனிப்பதற்கே முன்னுரிமை அளித்திருக்கவேண்டும்  அதனை நிறைவேற்றிய பின் மற்றைய பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் நலன்களில் கவனம் செலுத்துவது என்பது  ஆரோக்கியமான அரசியல் ஆகும் . ஆனால் அவர்களுடைய மலையக மக்களுக்கே வகைப்படுத்த முடியாத அளவிற்கு  பிரச்சினைகள் உள்ளன அவை தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடக்கம் , வீடு இல்லாமை, அத்தோடு இவர் வாக்குகளை  எதிர்பார்க்கின்ற பல  மாவட்டங்களில் மலையக மக்கள் சிறு சிறு தொகையாக சிங்கள மக்களுக்குள்   சொல்லில் அடங்க முடியாத  துயரங்களை சுமந்த வண்ணம் வாழ்கின்றனர். மனோகணேசன்  நடந்து கொள்ளும் விதம் எவ்வாறு எனில் தன்னுடைய வீட்டில் உள்ள  பிள்ளைகளுக்கு  சரியாக சாப்பாடு கொடுக்காமல் அதேவேளை தன்னை இந்த உயர்  நிலைக்கு கொண்டு செல்வதற்கு  உதவி செய்த தன்னுடைய சகோதரன் வீட்டிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும்  விதத்தில்  நிதியை செலவு செய்வது போல் . 

மாறாக வட கிழக்கு மக்களும் அவர்களுடைய மக்கள் பிரதிநிதிகளும் மனோ கணேசனிற்கு  செய்தது, செய்துகொண்டிருப்பது 

கடந்த பொது தேர்தலில்  வட கிழக்கை சேர்ந்த கொழும்பு வாழ் தமிழ்  மக்கள் பெருமளவு தமது வாக்குகளை வழங்கி இவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளனர்   இவர்களுடைய வாக்குகள் இல்லாவிடில் இன்று மனோ இல்லை
வட கிழக்கு வாழ் தமிழ் மக்களின்  பிரதிநிதிகள்  தேவைப்படும் போதெல்லாம் அது வரவுசெலவு திட்டமாக இருந்தாலும் சரி  அல்லது நம்பிக்கையில்லா   தீர்மானமாக இருந்தாலும் சரி  அல்லது ஆட்சி மாற்றத்திற்கான  முயற்சியாக இருந்தாலும் சரி  அவ் வேளைகளில் எல்லாம் தமது ஆதரவை மனோ கணேசன்  அமைச்சர் பதவிக்கும் இந்த  அரசாங்கத்திற்கு  வழங்கிய வண்ணமே உள்ளனர்.

பிரதி உபகரமாக மனோகணேசன் செய்ய  முற்படுவது என்னவெனில் தனது சுயநலத்திற்காக தனக்கொன்று ஒரு கட்டமைப்பை கிழக்கில் உருவாக்கி அதன் ஊடாக  தன்னுடைய செயற்பாடுகளை செய்ய முற்படுவது இது எந்தவகையிலும்  ஒரு  ஆரோக்கியமான விடயம்  அல்ல இம்  முயற்சியானது
  • ஏற்கனவே போரினால்  பெரும் இன்னல்களை சந்தித்து அவற்றில் இருந்து மிக  மெதுவாக மீண்டுவரும் தமிழ் சமூகத்திற்குள்  இன்னுமொரு குழப்பத்தை ஏற்படுத்தும் செயலாகும்
  • பல் சமூகம் வாழும் கிழக்கில் இவரது செயற்பாடு தமிழ் மக்களின் பிரதிநித்துவத்தை குறைக்கும் ஒரு முயற்சியாகும்  .
  • கிழக்கு மக்களை தனது சுய அரசியல் சுயலாபத்திற்க்காக   விற்பனை  செய்யமுற்படும் செயலுமாகும்.
  •  நன்கு திட்டமிட்டு கிழக்கில் கூடுதலாக  இளைஞர்களை மையப்படுத்தி தனது அமைச்சின் நிதியை  கொண்டு இவ்   இளைஞர்களுக்கு மிக மிக குறுகிய காலத்திற்கு மட்டும் நன்மையளிக்க கூடிய  திட்டங்களுக்கு நிதியை  வழங்கி  அந்த இளைஞர்களை  பிரிக்க முயற்சிப்பது 
  •  வருகின்ற மாகாணசபை தேர்தலில் தனது கட்சியை நாட்டின்  வடக்கு கிழக்கு உட்பட பெரும்பாலான மாவட்டங்களில்  களமிறக்கி தன்னுடைய  வாக்களர் பலத்தை காட்டி,     இலங்கை அரசியலில் ஒரு முக்கியபுள்ளியாக காட்டுவது 


பொதுநலம் கருதாது தன்னலம் கருதும்  ஒருவரிடம் இவற்றை எல்லாம் எதிர்பார்க்கமுடியாது இவர் செய்திருக்க வேண்டியது அவருடைய மக்களை விட  அவருக்கு கிழக்கில் உள்ள மக்களின் நலனில்தான்  முக்கிய அக்கறை இருக்கின்றது  என்று வைத்துக்கொள்வோமானால்  அவர் செய்ய வேண்டியது எமது கிழக்கில் உள்ள தமிழ் சமூகத்தோடு சேர்ந்து செல்ல கூடிய வகையிலும்   அத்தோடு சமுகத்திற்கு வலு சேர்க்க கூடிய வகையில் செயற்திட்டங்களை வகுத்தும்  செயற்படுத்தி  இருக்க வேண்டும்

மேலும் பார்ப்போமானால்   ரணிலின் அரசாங்கம் நிதி ஒதுக்கீட்டை செய்யும்போது    கிழக்கோடு தொடர்பு இல்லாத ஒரு தமிழ் அமைச்சரின் ஊடாகவும்  கிழக்கில் உள்ள தமிழ் சமூகத்தை பிரிக்க கூடிய வகையிலும்    செயற்திட்டங்களை வகுக்கின்றனர்   போன்று  உள்ளது. இம் முயற்சியானது  தமிழ் மக்களுக்கு புதிதல்ல அத்தோடு ரணிலுக்கு  எமது சமூகத்தை பிரிப்பது என்றால் மிகவும் பிடித்த விடயம் போலும். ரணில் தன்னையும் தனது அரசையும் காப்பாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இந்  நிதியை வழங்கி அவர்களின் ஊடாக தமிழ் மக்களுக்கு ஆக்கபூர்வமானதும் , நீண்ட காலத்திற்க்கும் நன்மை அளிக்கக்கூடியதுமான திட்டங்களை வகுத்து செயற்படுத்தி இருக்க வேண்டும்  . ஆனால் அவரோ எமது சமூகத்தை மீண்டும் ஒரு முறை பிரிக்க முற்படுவது போல் உள்ளது  அத்தோடு  இம் முயற்சிக்கு  ரணில் மனோ கணேசனை பயன்படுத்துவதும்  போலும்  தென்படுகின்றது

தமிழ்த் தலைமையை பொறுத்தளவில் மனோகணேசன் அவர்கள் கிழக்கு மாகாணத்தின் , மாகாண சபை தேர்தலில் தன்னுடைய கட்சியை களமிறக்கும் பட்சத்தில் தமிழ்த் தலைமைகள் கொழும்பில் தமது கட்சியை களமிறக்கும் முடிவும் மிகவும் வரவேற்கத்தக்கது .

அத்தோடு தற்போதைய வரவு செலவுத்திட்டத்தில் இவருடைய அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் வட கிழக்கிற்கு நிதி ஒதுக்கப்பட்டு இருக்குமே ஆயின் அதனை தமிழ்த் தலைமைகள்  கவனத்தில் கொண்டிருப்பார்கள் என்று நம்புகின்றோம். கிழக்கு வாழ் தமிழ் மக்களை பொறுத்த அளவில் போரின் தாக்கம் அவர்களை மற்றைய இரு சமூகங்களையும் விட மிகவும் பின் நிலைக்கு தள்ளியுள்ளது. இவ் வேளையில்   அழுத்தங்களை பிரயோகித்தாவது இந் நிதியை தமிழ் மக்களுக்கு நன்மை பயப்பிக்கக்கூடிய நீண்டகால திட்டங்களுக்கு பெற்றுக்கொடுக்கவேண்டும. இவ்வாறு தவறும் பட்சத்தில் ஏற்கனவே மேற்குறிப்பிட்ட  செயற்பாட்டிற்கு  தமிழ்த் தலைமையின் மென்போக்கு   ஒரு முக்கிய காரணமாக உள்ளதென தமிழ் மக்களிடையே  அபிப்பிராயம் விளங்கும் இந்தவேளை இவ் விடயத்தில் உறுதியாக நிற்காத பட்சத்தில் தமிழ்த் தலைமை கிழக்கு மக்களுக்கு ஒரு பெரும் தவறிழைத்த  ஒரு தலைமையாக கருதப்படும்.

கிழக்கு தமிழ்  மக்களை பொறுத்த அளவில் இப்படியான அரசியல் வாதிகளை பல முறை பார்த்தவர்கள். கிழக்கின் மகன் முன்னாள் முதலமைச்சர்   சந்திரகாந்தன் (பிள்ளையான்) அண்மைய காலத்தில் கிழக்கில் பெரும் அபிவிருத்தியை மேற்கொண்டவர்  என்ற வரிசையில் முன்னிலையில் உள்ளவர் ஆவார் ,  ஆனால்  அவருடைய அரசியல் கொள்கையை கிழக்கு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை  அதே வேளை அமைச்சர் மனோ கணேசன்  போல் அரசியல் வாதிகளிடம் நிதிகளை பெறுவதில் எமது மக்கள் வல்லவர்கள், பெறுவதிலும் எந்த ஒரு தவறும் இல்லை (மேற் குறிப்பிட்டகாரணங்களுக்காக) அத்தோடு  இந் நிதியானது ஒரு வகையில் கிழக்கு மக்களிற்கு  உரித்தானது . முடிவு எடுப்பது என்ற முக்கியமான வேளைகளில் எமது மக்கள்  எமது  சமூகத்தின் ஒருமைப்பாட்டை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுப்பதில் முன்புபோல் என்றும் உறுதியாய் இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை .

ஆர்.சயனொளிபவன்