(சகி )
இன்று பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் அதிகம் ஆதிக்கம் செலுத்துவது சமூகவலைத்தளங்களே.
இளம் வயதிலேயே அதுவும் பாடசாலை செல்லும் வயதிலேயே Android கைதொலைபேசி பாவனை இதற்கு முக்கியமான காரணம்.
காலையில் எழுந்தவுடன் முதல் வேலை பேஸ்புக் பார்ப்பது அதில் நேரத்தை வீணடிப்பது.
இன்று பல தற்கொலைகள் நடக்கின்றன இந்த பேஸ்புக் காதலால். நமது மட்டக்களப்பு நகரிலும் சில இளம் பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளன. முகப்புத்தகத்திலேயே பல சமூக விழிப்புனர்வாளர்கள் இது பற்றி விழிப்புணர்வு பதிவுகளை இடுகிறார்கள் ஆனாலும் இது போன்ற சம்பவங்கள் நடந்த வண்ணமே இருக்கின்றன. நம் சமூகத்து பெண்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
முக்கியமாக பெண் பிள்ளைகளின் பெற்றோர்கள் உங்கள் பிள்ளை கைதொலைபேசியை எதற்காக பாவிக்கிறாள் என்பதை அவதானிக்க வேண்டும். பிள்ளையின் உயிர் போன பின் காரணம் என்ன? காரணமானவன் யார்? அவள் பேஸ்புக்கில் என்ன இருக்கிறது? என்றெல்லாம் ஆராய்வதில் எந்த வித நன்மையும் இல்லை.
பெரும்பாலும் வயது குறைந்த இளம் வாலிபர்கள் தொடங்கி வயதானவர்கள் வரை எல்லோரும் பேஸ்புக் பாவிக்கிறார்கள். அதில் பல ஆண்கள் முழுமையாக பொய்யான சுயவிபரங்கள் பொய்யான புகைப்படங்களை இடுகின்றனர். இளம் பெண்களை தேடி அவர்களை தமது நண்பர் பட்டியலில் இணைத்து அப்பெண்களை காதலில் விழ வைக்கிறார்கள்.
முதலில் அந்த பெண்களின் முகப்புத்தக பக்கத்தை அலசி ஆராய்ந்து அவள் பற்றிய தகவல்களை சேகரிப்பார்கள் பின் அவளது பதிவுகளுக்கு லைக் இடுவார்கள் கருத்துக்கள் தெரிவிப்பார்கள்
அவளுடைய செயல்களை தான் மிகவும் விரும்புவதாகவும் மதிப்பதாகவும் அவளை நம்ப வைப்பார்கள். அதன் பின் மெதுவாக உரையாடலை ஆரம்பிப்பார்கள். நான் மற்ற ஆண்களை போல் அல்ல என்று கூறி கவிதைகளும் காதல் வசனங்களும் பேசுவார்கள். மூன்று வேளையும் மறக்காமல் மெசேஜ் அனுப்புவார்கள். நீ மட்டும் தான் எனக்கு முக்கியம் உன்னை விட எனக்கு வேறெதுவும் தேவையில்லை என்பார்கள்.
ஒரே காதல் மொழியை பல பெண்களுக்கு அனுப்புவார்கள்.
அந்த பெண்களும் அதை எல்லாம் நம்பி ஆழமான காதலும் நம்பிக்கையும் வைப்பார்கள். பிறகு ஒரு நாள் நேரில் சந்திப்போம் என்பான் அந்த வாலிபன். அங்கு அவள் சென்று பார்த்தால் அவள் காதலித்த வாலிபனுக்கு சற்றும் பொருந்தாத ஒருவன் வந்து நிற்பான். உடனே அந்த பெண் மனமுடைந்து வாழ்வை முடித்து கொள்ள துணிவாள்.
ஒரு வேளை அவன் அவள் எதிர்பார்த்தவனாகவே இருந்தாலும் அதிலும் ஒரு பிரச்சினை நடக்கும். அது என்னவென்றால் சந்தித்த உடன் வா தனிமையில் பேசுவோம் என்பான். அவள் தயங்குவாள். அவன் என் மீது நம்பிக்கை இல்லையா என்பான் . உடனே அவள் சம்மதிப்பாள். அங்கு அவனின் உடல் தேவைகள் தீரும் அவளின் கற்பு கயவனிடம் பறிபோகும். அவள் பல கனவுகளோடு வீடு வந்து பேஸ்புக்கை பார்த்தால் அங்கு அவள் காதலனின் எந்த தகவலும் இருக்காது. அப்படி ஒருவன் இருந்ததற்கான தடயமே இருக்காது.
இனி என்ன காதலும் போய் கற்பும் போய் தற்கொலை தான் முடிவு.
இப்படியான கயவர்கள் காதல் என்ற பெயரில் பல பெண்களின் கற்பை சூறையாடி அவர்களின் வாழ்வை சீரழிக்கிறார்கள். இப்படியான பிரச்சினைகள் ஒருபுறம் என்றால் இதையும் தாண்டிய முக்கியமான ஒரு பிரச்சனை வீடியோவில் அந்தரங்கங்களை காட்டுவது.
ஒரு பெண் காதலில் விழுந்தவுடன் அடுத்து அந்த ஆண் கேட்பது உன்னை பார்க்க வேண்டும் என்று.
வீடியோவில் பேசலாம் என்பான் அவன். அவள் முடியாது வீட்டில் எல்லோரும் இருக்கிறார்கள் என்பாள்.
யாரும் இல்லாத நேரம் பேசலாம் என்று கெஞ்சுவான் குழைவான் அந்த ஆண்.
முதலில் முகம் பார்த்து பேசுவார்கள்.
நீ என்ன உடை அணிந்துள்ளாய் என்று கேட்பான் அவன். அவள் வீடியோவில் உடையுடன் சேர்த்து தன் உடல் அழகையும் காட்டுவாள். அவள் அந்தரங்க வீடியோவை அவன் தன் தொலைபேசியில் சேமித்து வைப்பான்.
இந்த காதல் விளையாட்டு படுக்கையறை தொடங்கி குளியலறை வரையும் வீடியோவில் நடந்தேறும்.
சரி எல்லாம் முடிந்தது என்று காதலனில் உள்ள நம்பிக்கையில் அவள் நிம்தியாக இருப்பாள்.
ஆனால் அவன் அந்த வீடியோவை தன் நண்பர்களுக்கும் காட்டுவான்.
அவர்களும் அந்த பெண்ணை முகப்புத்தகத்தில் அழைப்பார்கள். தமது ஆசைக்கு இணங்க சொல்லி வற்புறுத்துவார்கள். அவள் மறுத்தால் அவளது அந்தரங்க வீடியோவை அவளிடம் காட்டி மிரட்டுவார்கள். அப்போது தான் அந்த பெண் உணர்வாள் தான் ஏமாந்து போனதை.
அதன் பின் அவமானத்தோடு வாழ முடியாமல் தூக்கில் தொங்கி விடுவாள் அ அவள்.
இது தான் இன்றைய யதார்த்தம் பெண்களே. பேஸ்புக்கில் தெரியாத ஆண்களை உங்கள் நண்பராக சேர்க்காதீர்கள். அப்படி யாரும் இருந்தாலும் அவர்களுடன் பேசுவதற்கு முன் யோசியுங்கள்.
விலைமதிப்பற்ற உங்கள் கற்பை இந்த அற்ப சுகத்திற்காக அலையும் ஆண்களிடம் ஏன் அடகு வைக்கிறீர்கள். வீணாக உங்கள் உயிரை ஏன் மாய்த்து கொள்கிறீர்கள்.
முகப்புத்தகத்தில் செய்யக்கூடிய நல்ல விசயங்கள் பல இருக்கின்றன. பல பெண்கள் முகப்புத்தகத்தில் தங்கள் புகைப்படங்கள் மற்றும் சொந்த அனுபவங்கள் போன்றவற்றை பதிவிடுகிறார்கள் தான் நான் அதை மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் ஆதில் வரும் பிரச்சினைகளையும் எதிர்ப்புகளையும் எதிர்கொள்ள கூடிய நிலையில் இருக்கிறார்கள். அவர்களது தொழில் குடும்ப பின்னணி பொருளாதாரம் என பல காரணங்கள் உண்டு.
அது தான் உண்மை.
இன்னொருவர் செய்கிறார் என்று நீங்களும் அதை செய்ய முயற்சிக்காதீர்கள்.
அவர்கள் நிலை வேறு உங்கள் நிலை வேறு.
தயவு செய்து புகைப்படங்கள் பதிவிடுவது காதலில் விழுவது இது போன்ற செயல்களை செய்யும் முன் உங்கள் குடும்பத்தை பற்றி சிந்தித்து பாருங்கள்.
பெண்கள் நீங்கள் இந்த சமூகத்தில் சாதிக்க வேண்டியவை நிறைய இருக்கின்றன.
ஆகவே நீங்கள் இது போன்ற வீண் பிரச்சினைகளில் ஈடுபடாமல் முகப்புத்தகத்தை நல்ல விதமாக பயன்படுத்துங்கள்.
உங்கள் விலைமதிப்பற்ற கற்பையும் உயிரையும் நீங்கள் தான் பாதுகாத்து கொள்ள வேண்டும்.
-சகி-