தகவல் தொழில்நுட்பத்தினை மேலும் உள்ளீர்தலினால் அரச சேவைத் தரத்தை வினைத்திறனாக்கலாம் - மட்டு அரச அதிபர்


மட்டக்களப்பு மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்தினை மேலும் உள்ளீர்தலினால் அரச சேவைத் தரத்தை வினைத்திறனாக்கல் எனும் அரச அதிபரின் விசேட பணிப்புரை மற்றும் ஆலோசணையின் கீழ் மாவட்டத்தில் நலிவுற்றுக் காணப்படும் கணினி அறிவு, ஆங்கில மற்றும் சிங்கள மொழிக் கல்வி மற்றும் புதிய தகவல் தொழில் நுட்ப விருத்தியை மாவட்டத்தில் அதிகரிக்கும் முகமாக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி சிறிகாந்த் அவர்களின் தலைமையில் மாவட்ட இணைப்பாளர் (உற்பத்தித் திறன்) ஆர்.புவனேந்திரன் மற்றும் மாவட்ட மனிதவலு மேம்பாட்டு அலுவலர் ரீ.சுரேந்திரன் அவர்களது பங்குபற்றுதலுடன் 14 பிரதேச செயலகங்களையும் ஒன்றித்ததாக முதற்கட்டமான ஒரு செயற்திட்டப் பொறிமுறை அலுவலர் குழுமம் ஒன்று அண்மையில் அமைக்கப்பட்டது.

இதில் 14 பிரதேச செயலகங்களையும் சேர்ந்த பிரதேச செயலகசார் வலைப்பக்க இற்றைப்படுத்தல் மேலாளர்கள் மற்றும் பிரதேச செயலகங்களைச் சேர்ந்த உற்பத்தித்திறன்சார் அலுவலர்கள் இக்குழுமத்தில் பங்கேற்றிருந்தனர். இச்செயற்திட்டக் குழாத்தினூடு செயலக ரீதியாக திணைக்கள ரீதியில் காணப்படும் தகவல் தொழில் நுட்பக் குறைபாடுகள் மற்றும் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு பங்களிக்கவும் மேலும் உத்தியோகத்தர்களை ஒன்றித்து அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கும் நோக்கில் இக்கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டது.

மேலும், மாவட்ட ரீதியில் மேற்படி செயற்பாட்டிற்கு தன்னார்வுமிக்க பங்களிப்பை நல்குவதற்காக விசேடமாக அரச அதிபருக்கு கோரிக்கைவிடுத்த நிறுவனங்கள் இதில் சிறப்பு வளதார்களாக பங்கேற்றிருந்தனர். மொபிட்டல் நிறுவனம் சார்பில் வினோதன் அவர்களும், ESOFT Metro Campus நிறுவனம் சார்பில் நிருபன் அவர்களும், WINSYS நிறுவனம் சார்பில் விக்கினராஜ் அவர்களும், HEADWAY நிறுவனம் சார்பில்  ரஞ்சித் அவர்களும் மற்றும் மாவட்ட மனிதவலு மேம்பாட்டுக்கிளை அலுவலர் ரீ.சுரேந்திரன் அவர்களும் தமது காட்சிப்படுத்தல்களை மிகச் சிறப்பாக நிகழ்த்தியிருந்தனர். அலுவல்களுக்கு பல்வேறு புதிய தகவல் தொழில் நுட்ப விடயங்களை அறிமுகம் செய்தவொரு விடயமாகவும், மேலும் புத்தாக்க விருத்திக்கு பங்களித்தக்கவாறான ஒரு இலகு அணுகுமுறையினை சகல வளதாரர்களும் ஏற்படுத்தியிருந்தமை மிகவும் சிறப்பம்சமாகும். மேற்படி விடயசார் ஒழுங்கமைப்பு மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந்த் அவர்களின் வழிகாட்டுதல்களின் கீழ் மாவட்ட வலைப்பக்க நிர்வாகி ரா.ராஜசுரேஸ் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரதேச செயலகம் மற்றும் மாவட்டச் செயலகம் சார்பில் மக்களுக்காக முன்னெடுக்கப்படும் சேவைகளில் தகவல் தொழில்நுட்பத்தினை மேலும் உள்ளீர்தலினால் மாவட்ட ரீதியில் அரச சேவைத் தரத்தினை மேலும் வினைத்திறனாக்கும் நோக்கில் மாவட்ட அரச அதிபர் மாணிக்கம் உதயக்குமார் அவர்களது விசேட மேற்பார்வையின்கீழ் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அலுவலர்கள்சார் திறன்விருத்தி செயற்பாடுகளுக்கான பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

மேற்படி செயற்பாட்டிற்கு பங்களிக்க விரும்பும் தன்னார்வமிக்க நிறுவனங்கள், சமுக ஆர்வலர்கள் மற்றும் மாவட்ட ரீதியிலாக இப்பணிக்காக இணைய விரும்பும் நலன்விரும்பிகள் இத்திட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பும் வழங்கப்படுமென்பதோடு, தமது பிரதேசத்தை இச்செயற்பாடுகளினால் மேலும் விருத்தி செய்யவிரும்பும் தொண்டு நிறுவனங்களும் இதில் இணைந்து கொள்ளமுடியும் என இதன்போது அழைப்பு விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.