பொதுநூலக வரலாற்றில் முதலாவது இணையவழி நூலக அணுகல் சேவை பேத்தாழை பொதுநூலகத்தில் இன்று சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைப்பு!

(ஜெ.ஜெய்ஷிகன்)

இலங்கை பொதுநூலக வரலாற்றில் முதலாவது இணைய வழி நூலக அணுகல் சேவை பேத்தாழை பொதுநூலகத்தில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

இலங்கை பொது நூலக வரலாற்றில் முதன் முறையாக இணையவழி நூலக அணுகல் சேவை (Online Public Access Catalogue Service) இன்று (18.10.2016) பேத்தாழை பொது நூலகத்தில் www.pplib.info என்ற உத்தியோக பூர்வமான இணைய விலாசத்தினூடாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பேத்தாழை பொதுநூலகமும், ‘விபுலானந்தா வாசகர் வட்டமும்இணைந்து நடாத்திய இந்நிகழ்வுக்கு கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ஜனாப்.எஸ்.எம்.சிஹாப்தீன் மற்றும் பேத்தாழை பொது நூலக நூலகர் திரு.வே.கேதாதரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்நிகழ்வில் அதிதிகளாக இணையவழி நூலக அணுகல் சேவைக்கான மென்பொருளினை நிறுவி, அதனை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு உறுதுணை புரிந்து கொண்டிருக்கின்ற கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட உதவி நூலகர் எம்.என்.ரவிக்குமார் அவர்களும், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல் அவர்களும், கோறளைப்பற்று பிரதேச உதவி செயலாளர் திருமதி. நிருபா பிருந்தன் அவர்களும், கல்குடா வலய உதவிக் கல்விப் பணிப்பாளர். திருமதி. சுஜாதா குலேந்திரகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல் அவர்கள் உத்தியோக பூர்வமாக இச்சேவையினை ஆரம்பித்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, பேத்தாழை நூலக உதவியாளர் ம.பிரகாஷ் அவர்களினால் இச்சேவை குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட உதவி நூலகர் எம்.என்.ரவிக்குமார் அவர்கள், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். விழாவில் பேசிய அதிதிகள் இன்றைய விழாவில் தாம் கலந்து கொள்வதையிட்டு பெருமை கொள்வதாகவும், தாங்கள் பணிபுரிகின்ற இப்பிரதேசத்தில் இதுபோன்றதொரு சேவையினை இலங்கையில் முதன் முதலாக ஆரம்பித்துள்ள பொதுநூலகம் என்ற பெருமையினை பேத்தாழை பொதுநூலகம் பெற்றுக் கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டனர். மேலும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட உதவி நூலகர் எம்.என்.ரவிக்குமார் அவர்கள் உரையாற்றுகையில் இந்த செயற்றிட்டமானது 2013 ஆம் ஆண்டில் இருந்து இந் நூலகத்தில் கடமை புரிந்து வந்த அனைத்து உத்தியோகத்தர்களின் அயராத உழைப்பினாலேயே இந்த வெற்றி சாத்தியமானதுஎனவும் சுட்டிக் காட்டினார்.
இறுதியாக விபுலானந்தா வாசகர் வட்டத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினரான திரு.எஸ்.சந்திரமோகன் அவர்களின் நன்றியுரையில். பேத்தாழை பொதுநூலகத்தின் சாதனைமிக்க இத்தருணத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்தார். அத்தோடு இத்தனை சாதனைகளுக்கும் பெருமைகளுக்கும் காரணமான கிழக்கு மாகாணசபையின் முதல் முதலமைச்சரும், தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் அவர்களுக்கு, நூலக சமூகம் சார்பிலும், பிரதேச மக்கள் சார்பிலும் மேலான நன்றிகளைக் கூறிக்கொள்வதாகக் குறிப்பிட்டார்.
இந் நூலகம் கடந்த 2013ஆம் ஆண்டில் இலங்கையிலுள்ள பொதுநூலகங்களுக்கான தரப்படுத்தல் போட்டியில், பிரதேச சபைகளின் கீழ் இயங்குகின்ற பொதுநூலகங்களில் முதலாம் இடத்திற்கு தெரிவாகி ஜனாதிபதி விருதினை பெற்றுக் கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.