தன்னை விரும்பி வழிபடுவோருக்கு தன்னருட் காட்சியைக் கொடுக்கும் வெல்லாவெளி சிறி முத்துமாரியன்மன் ஆலயம்.

(சித்தா)
மட்டக்களப்பு தேசத்து அம்மன் வழிபாட்டியலில் வெல்லாவெளி முத்துமாரியம்மன் கோவிலுக்கு என்றும் ஒரு தனியான இடமுண்டு. பண்டைய சுவாதியம்மன் வழிபாட்டோடு தொடர்புபட்ட வழிபாடாகவே ஆய்வாளர்கள் இதைக் குறிப்பிடுகின்றனர். தமிழும் சைவமும் இரண்டறக் கலந்து மிளிரும் விழுமியங்களால் ஆழமாகக் கட்டியெழுப்பட்டது. இம் மக்களின் பாரம்பரியம் மிக்க மரபு வழிப்பட்ட பண்பாட்டுக் கோலங்களில் ஸ்ரீ முத்துமாரியம்மன் வழிபாடு சிறப்புடையதாகும். 
இங்கு வாழ்ந்த மக்கள் நாதனைக் கல்லடியில் அடுத்தடுத்து இரு மலைக் குன்றுகளில் ஒன்றில் விநாயகரது கற்சிலையைச் செதுக்கியும் மற்றையதில் மாரியம்மனின் மறுவுருவான சுவாதியம்மனை உருவகப்படுத்தியும் வழிபாடு செய்து வந்தனர். அவ்விடத்திலிருந்து அரை மைலுக்கு அப்பால் நாதனையில் கனி வகைகள், தேன்,பால் மலிந்து காணப்பட்டதாலும் நாதனை ஆறு அதனை வளம் செய்வதாலும் மக்கள் அங்கு குடியேறலாயினர். காலப் போக்கில் அங்கு ஏற்பட்ட கொள்ளை நோயினால் அடுக்கடுக்காய் இதில் பலபேர் மரணமாயினர். இதனால் கவலையுற்ற ஊரவர்கள் சிலர் வேள்விகள் செய்தும் பொங்கலிட்டும் பல தெய்வங்களை வழிபட்டும் அந் நோய் தீராமையினால் அங்கு ஒரு பகுதியில் வாழ்ந்த வதனமாரிடம் எடுத்துக் கூறினர். அவர்கள் முத்து மாரியம்மனை வழிபாடு செய்யுமாறு ஆலோசனை கூற ஊரின் ஒரு புறத்தில் கொத்துப் பந்தரிட்டு மாரியை குல தெய்வமாக்கி வழிபட்டனர். இவ் வழிபாடு மிகுந்த நன்மையளிக்கவே  1800 இன் முற்பகுதியில் ஒரு சிறிய கோவிலை தற்போது கோவிலுள்ள இடத்தில் அமைத்து வழிபடலாயினர். பின்னர் 1850 காலகட்டத்தில் திடமானதொரு கோவிலை அம்மனுக்கு நிர்மாணித்ததோடு அதன் அருகில் பிள்ளையாரை மூலமூர்த்தியாக பிரதிஸ்டை செய்து சிவனையும் முருகனையும் அதனுள் வைத்து வழிபட்டனர். வெளிப்புறத்தில் தெற்குப் பக்கமாக அமைந்திருந்த பெரிய புற்றில் நாகம் குடி கொண்டதனால் அதனைக் கண்கண்ட தெய்வமாக நம்பிய மக்கள்  அப் புற்றையும் வழிபடலாயினர். பின்னர் 1917 இல் இவ்வாலயம் மேலும் திருத்தியமைக்கப்பட்டது. காலப்போக்கில் ஆலய எல்லைக்கு வெளிப்புறமாக தென்மேற்கில் பெரிய அரசமர நிழலில் விஷ்னுவுக்கு கோவிலமைத்து வழிபடலாயினர்.
1967 இல் மாரியம்மன் ஆலயம் முற்றாக இடிக்கப்பட்டு புதிய ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. 1969 இல் குடமுழுக்கும் சிறப்பாக இடம்பெற்றது. இதன் பின்னர் நித்திய பூசைகள் தவறாது இடம்பெற்றது. எனினும் 1990 முதல் 1994 வரையான மக்களின் நிரந்தர இடப் பெயர்வால் நித்திய பூசையோ, வருடாந்த சடங்கோ இடம்பெறவில்லை. 1994 இல் இடம் பெற்ற கும்பாவிஷேகத்தைத் தொடர்ந்து நித்திய பூசைகளும் வருடாந்த சடங்கும் இடம் பெற்று வருகின்றன. 
இந்த வகையில் இவ் ஆண்டும் மாரியம்மன் சடங்கு 11.06.2016 ஆம் திகதி சனிக் கிழமை திருக் கதவு திறத்துலுடன் ஆரம்பமாகி 20.06.2016 திங்கட்;கிழமை தீர்த்த உற்சவமும் சக்கரை அமுதும் இடம்பெற்று அம்மனின் வாழிபாடுதலுடன் இவ்வாண்டிற்கான உற்சவம நிறைவு பெறவுள்ளது. திருக்கதவு திறத்தல் என்பது அம்மனிடம் அவரது அருளை வேண்டி பயபக்தியுடன் பூசகரால் மேற்கொள்ளப்பட்டு வந்த சமயச் சடங்கே 'கதவு திறத்தல் சடங்காகும்'
இதனைத் தொடர்ந்து அம்மனின் அருட் சக்தியை கும்பத்தில் வரவழைத்து அப் பூரண கும்பத்தையே  அம்மனின் திருவுருவாகக் கொண்டு வழிபட்டு வந்ததே பண்டைய இக் கோவிலின் மிகவும் விசாலமான சடங்கு மரபாகும். முதலில் கருவரையில் விநாயகப் பெருமானை வணங்கி அம்மனுக்கான மூல கும்பம் வைக்கப்பட்டு அதன் வலது பக்கம் பேச்சியம்மனுக்கான கும்பமும், இடது பக்கம் காளியம்மனுக்கான கும்பமும் வைக்கப்பட்டு இத் தெய்வங்களின் சக்தியினை மந்திர உச்சாடனத்தின் மூலம் வரவழைத்து அச் சக்திகளின் அருளுடன் மாரியம்மன் சடங்கு தொடங்கப்படும். 
மாரியம்மன் சடங்கின் போது அகவல், காவியம், ஊர்சுற்றுக் காவியம், தாலாட்டு, குளுர்த்திப் பாடல்கள் என பண்டைய இலக்கியங்களுக்கு செழுமை சேர்க்கும் பாடல்கள் பாடப்படும் ஆலயமாக இவ் ஆலயம் காணப்படுகிறது. 
இவ் ஆலயத்தில் பிரதான விடயமாக நோய் தீர்த்தல் எனும் நிகழ்வு எல்லோரினது மனதையும் நெகிழவைக்கும் ஒரு அம்சமாகும். நீண்டகால நோய்களை தீர்த்தல்;, பிள்ளைப்பேறு, போன்றவற்றிற்காக அடியவர்கள் இவ் ஆலயத்தை நாடி வருகின்றனர்.
வல்லவினை அகற்றிடுவாள் மகமாயி
வெல்லாவெளி நகர் வாழுகின்ற விசாலாட்சி
புல்லுநல் அருவிகள் இசைபாடும்
அன்னை பூங்கழல் இல்லமெல்லாம் நடமாடும்

பா.வரதராஜன்