ஆளுமைகளாக மீட்டுக்கொடுக்கும் பயில்களங்களாக சிறுவர் கூத்தரங்கு - கலாநிதி சி. ஜெயசங்கர்.

சிறுவர்களுக்கும் விளையாட்டுக்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அதே போல ஆடுதல், பாடுதல், கதை கேட்டல், கதை கூறுதல், கீறுதல், வரைதல், கொட்டில் கட்டுதல், அலங்கரித்தல் என அவர்களது விருப்பு வெளிப்பாடுகள் விரிந்து போகும்.

இவை அனைத்தும் ஓரிடத்தில் வருவதாக சிறுவர் கூத்தரங்கு வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. சிறுவர்களது ஆற்றல் வெளிப்பாட்டுக்கும் ஆளுமை விருத்திக்குமான விளையாட்டுக் களமாக சிறுவர் கூத்தரங்கு இயங்கிவருகின்றது.


சிறுவர்களுக்கான மகிழ்வூட்டலுக்குமான களமாக இருப்பதுடன் பெற்றார்கள், பெரியவர்கள் உட்பட்ட முழுச்சமூகத்திற்கும் உரியவகையிலும் சிறுவர் கூத்தரங்கு இயங்கி வருவது அதன் சிறப்பம்சமாகும். போட்டிப் பரீட்சைகளால் மழுங்கடிக்கப்படும் சிறுவர்களை அவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் மற்றும் பெரியோர்களுக்கும் முற்றுமுழுதான ஆளுமைகளாக மீட்டுக் கொடுக்கும் பயில்களங்களாக சிறுவர் கூத்தரங்கு வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

நவீன அரங்கின் சிறுவர் அரங்கும் பாரம்பரிய அரங்கும் இணைந்ததான பண்புகளைக் கொண்டதாக சிறுவர் கூத்தரங்கு உருவாக்கம் பெற்றிருக்கின்றது.

இவ்வாறு உருவாக்கம் பெற்ற சிறுவர் கூத்தரங்கு மட்டக்களப்பின் கிராமங்களிலும் பல்கலைக்கழகத்திலும் சிறுவர்களாலும் கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்களாலும் ஆற்றுகை செய்யப்பட்டிருக்கின்றது.

ஏட்டண்ணாவியார் செ.சிவநாயகம் அவர்களால் ஆக்கப்பட்ட மழைப்பழம் சிறுவர் கூத்து கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்களாலும் விரிரையாளர்களாலும் ஆற்றுகை செய்யப்பட்டது. சீலாமுனையிலும் நுண்கலைத்துறையிலுமாகப் பயிலப்பட்ட மேற்படி சிறுவர் கூத்து சீலாமுனை அண்ணாவியார் சி.ஞானசேகரம் அவர்களால் பழக்கப்பட்டது.

மேற்படி சிறுவர் கூத்தில் பங்குபற்றிய நுண்கலைத்துறை இதியாண்டு மாணவி தி.துலக்சனா அண்ணாவியார் வே.தம்பிமுத்து அவர்களின் பழக்கத்தில் சித்தாண்டிக் கிராம சிறுவர்களுடன் இணைந்து மழைப்பழம் சிறுவர் கூத்தை தயாரித்திருந்தார்.

இச்சிறுவர் கூத்தரங்கச் செயற்பாடு தொடர்ந்தும் பல்வேறு இடங்களிலும் ஆற்றுகைச் செயற்பாடுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த வகையில் கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை இறுதியாண்டு மாணவன் இ.கங்கைக்கோபாலன் யாழ்ப்பாணம் சுதுமலை சிந்மய பாரதி வித்தியாலய மாணவர்களுடன் இணைந்து மழைப்பழம் சிறுவர் கூத்தை தனது இறுதியாண்டு ஆய்வுத் தேவைக்காக ஆற்றுகை ஆய்வாகத் தயாரித்து வருகின்றார்.

மழைப்பழம் சிறுவர் கூத்தரங்கச் செயற்பாட்டின் ஆரம்பம் முதல் பங்கேற்று வரும் கங்கைக்கோபாலனின் தயாரிப்பிற்கு அண்ணாவியாராக  சீலாமுனையைச் சேர்ந்த சி.ஞானசேகரம் அவர்கள் விளங்குகின்றார். இவர்களுடன் ஏட்டண்ணாவியார் செ.சிவநாயகம் அவர்களும் இப்பயிற்சியில் பங்குபற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

பாரம்பரிய முறைப்படி சட்டங்கொடுத்தலுடன் ஆரம்பமான கூத்துப்பழக்கத்தின் சதங்கையணி விழாவும் அரங்கேற்றமும் எதிர்வரும் 15ஆம் 16ஆம் திகதிகளில் (15,16. 09.2015) இடம்பெறவிருக்கின்றது.

சிறுவர்களின் விளையாட்டு விழாவாகவும் பெரியவர்களுக்குமான மகிழ்வூட்டும் திருவிழாவாகவும் சிறுவர் கூத்தரங்கவிழா பாரம்பரிய முறைப்படி அமைக்கப்பட்ட வட்டக்களரியில் ஆற்றுகை செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

பாரம்பரியக் கூத்தரங்கு சமூகத்தை ஒன்றிணையவைக்கும் திருவிழாவாகும். இவ்வகையில் சிறுவர் கூத்தரங்கும் வடிவமைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சமூகத்தை ஒன்றிணைத்து இயங்க வைக்கும் ஆற்றுகை ஆய்வுச் செயற்பாடாக சிறுவர் கூத்தரங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.