பேத்தாழை பொதுநூலகத்தில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்!

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு 'ஒக்டோபர்-2014' மாதம் முழுவதும் பல நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இந் நிகழ்வு வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள பேத்தாழை பொதுநூலகத்தின் நூலகர் தி.சரவணபவான் தலைமையில், பேத்தாழை பொநூலகத்தின் விபுலானந்தர் வாசகர் வட்டத்தின் பங்களிப்புடன் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

தேசிய வாசிப்பு மாதத்தின் ஒரு அம்சமாக 'நடமாடும் நூலக சேவையினை' நாசிவன்தீவில் நடத்தியது. பல மாணவர்கள் ஆர்வத்துடன் இந்நிகழ்வில் கலந்து புத்தகங்களை படித்து மகிழ்ந்தனர்.

இதன் மற்றுமோர்  நிகழ்வாக 'தேசிய வாசிப்பு மாத விழிப்புணர்வு ஊர்வலம்' நடைபெற்றது. பேத்தாழை விபுலானந்த வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பமான இவ்வூர்வலத்தில் பேத்தாழை விபுலானந்த வித்தியாலயம், வாழைச்சேனை இந்துக்கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்களுடன் கோறளைப்பற்று பிரதேச சபையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்  எஸ்.குகநேசன், பேத்தாழை பொது நூலகத்தின் வாசகர் வட்ட உறுப்பினர்களும் நூலக ஊழியர்களும்  கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இன்று (16.10.2014) பாடசாலை மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்துள்ளன. தரம் 2 முதல் தரம் 13 வரையிலான மாணவர்கள் பங்குபற்றிய வாசிப்பு போட்டி, திருக்குறள் மனனப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி என்பன நடைபெற்றன. வலயத்திற்குட்பட்ட 10க்கு மேற்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டனர்.

 வாசிப்பு மாதத்தின் அடுத்த சிறப்பு நிகழ்வாக எதிர்வரும் 'ஒக்டோபர் 24'ஆம் திகதி நூலகத்தில் 'நூல் காட்சி' இடம்பெறவுள்ளது. அன்றைய தினம்,  இலங்கையின் தமிழ் கதைசொல்லிகளின் வாரிசும், உலகத் தமிழன்பர்களால் வானொலி மாமா என போற்றப்படுபவருமான மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் கதை கூறும் நிகழ்வும் அத்துடன் வாழைச்சேனை தமிழ் கலை, இலக்கிய மன்றத்தினரால் மாஸ்டர் சிவலிங்கம் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.