மேஷம்- குருப்பெயர்ச்சி பலன்கள்

மேஷ இராசி அன்பர்களே....
உங்களுக்கு குரு பாக்கிய-விரயாதிபதி ஆவார். அவர், 19.6.2014 வியாழன் அன்று மிதுனத்தில் இருந்து கடக இராசிக்கு பிரவேசிக்கிறார். உங்கள் ராசிக்கு 4-ம் இடத்திற்கு செல்லும் குரு யோகத்தை வாரி வழங்க போகிறார். உங்கள் இராசிக்கு 8-ம் இடம், 10-ம் இடம், 12-ம் இடங்களை குருபார்வை செய்வதால், தடைபட்ட திருமணம் நடக்கும். தொழில் உத்தியோகம் சிறப்பாக அமையும். விரயங்கள் தவிர்க்கப்படும். பொதுவாக குரு 4-ம் இடத்தில் அமர்ந்தால் உங்கள் இராசிக்கு யோகத்தை கொடுப்பார். எப்படியெனில், திரிகோணாதிபதி கேந்திரத்தில் அமர்ந்தால் வராத பணமும் கைக்கு டக்கென்று வந்து விடும். அதுமட்டுமல்ல, 4-ம் இடத்தை குறிக்கும் வீடு, வாகனம், கல்வி அத்தனையும் அவன் அருளால் உங்களை வந்தடையும்.  8-ம் இடத்தை பார்வை செய்வதால், இதுவரையில் இழுத்துக்கொண்டு வந்த வழக்கு பிரச்னை தீர்வுக்கு வரும். உறவினர் வருகையால் நற்செய்தி, கேளிக்கை, ஆடம்பர செலவு அதிகமாகும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். 


தாயாருக்கு உடல் நலக்குறைவு இருந்தாலும் பிணி நீங்கும். கடந்த ஆண்டு மூன்றாம் இடத்திலிருந்த குரு பகவான் அவ்வளவு திருப்தியான நன்மையை செய்யவில்லை என கவலையில் இருந்திருக்கலாம். தேவையில்லா பகை, விரயம், மனக்குழப்பத்தை கொடுத்து இருந்தாலும், தற்காலம் அவர் 4-ம் இடத்திற்கு வருவதால், இனி உங்களுக்கு நல்ல நேரமே. இருப்பினும் சிறு விஷயத்தை மட்டும் கவனத்தில் வைத்திருங்கள். அது என்னவெனில், வாகனத்தை ஓட்டும் போது மட்டும் சற்று நிதானம் தேவை. 

கடக குரு உச்சம் பெற்ற குரு. ஆகவே நன்மைகள் உங்களை தேடி, நாடி வரும். குரு பெயர்ச்சி அன்று விநாயகப்பெருமானையும், தட்சிணா மூர்த்தியையும், குருபகவானையும் வழிபடுங்கள். அன்று காலை முதலில் விநாயகரை வணங்கிவிட்டு, உற்சாகமாக உங்கள் வேலையை தொடங்குங்கள். சோதனைகள் பறந்துவிடும். சாதனைகள் உங்களை வந்தடையும். ஸ்ரீகஜலஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும். குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.