கன்னி - குருப்பெயர்ச்சி பலன்கள்

கன்னி இராசி அன்பர்களே… 
19.6.2014 அன்று குரு பகவான் உங்கள் இராசிக்கு 11-ம் இடத்திற்கு வருகிறார். 11-ம் இடம் லாபஸ்தானம். இனி நீங்கள் மண்ணை தொட்டாலும் பொன்னாகும். அப்படி ஒரு யோகம் அடிக்க போகிறது. உங்கள் இராசிக்கு 4-ம் வீடு, 7-ம் வீட்டின் அதிபதி குரு. அதாவது சுகாதிபதி, சப்தமாதிபதி குரு பகவான். அவர் உங்கள் இராசிக்கு லாபத்தில் அமர்வதால்,  தடைப்பட்ட காரியங்கள் கைகூடும். உங்கள் இராசிக்கு 3-ம் இடம், 5-ம் இடம், 7-ம் இடத்தை பார்வை செய்வதால், அந்த இடங்கள் சுபிக்ஷம் அடைந்து நன்மைகளை கொடுக்கப்போகிறது. 3-ம் இடம் கீர்த்தி ஸ்தானம். உங்கள் செல்வாக்கு உயரும். இதுவரையில் அபகீர்த்தி அனுபவித்த சிலர் பெருமைப்பட பேசப்படுவர். 

முடியாத காரியமும் முழு முயற்சியால் முடிப்பீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்வை செய்வதால், பூர்வீக சொத்துக்களில் வில்லங்கம் இருந்தால் விலகி உங்கள் கைக்கு வரும். பிள்ளைகளுக்கு சுப நிகழ்ச்சி நடக்கும். 

திருமணம் ஆகுமா என்று ஏங்கி கொண்டு இருந்தவர்களுக்கு மணவாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். கூட்டு தொழிலில் லாபம் கிடைக்கும். மனைவியால் நல்ல யோகம் உண்டு. பொதுவாக 11-ம் இடம் நல்ல யோகமான இடம். ஆகவே பல வழிகளில் நன்மைகள் நாடி வரும். கடல் கடந்து போகும் பாக்கியமும், வெளிநாட்டில்  வேலை வாய்ப்பும் கிடைக்கும். இதுவரை தடைபட்ட கட்டட வேலை மட, மடவென எழும். 

இவ்வளவு நன்மைகள் செய்ய கூடிய குரு பகவான் சில விஷயங்களில் உங்களை கவனமாகவும் இருக்கச் சொல்கிறார். அதாவது வழக்கு இருந்தால் சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். நீயா-நானா என ஈகோ பார்க்க கூடாது. உடல்நலனில் கவனம் தேவை. பெற்றோர் வசம் சுமுகமாக இருக்க வேண்டும். கணபதியையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்கிவிட்டு முன்னேற காலடி எடுத்து வையுங்கள். ஸ்ரீகஜலஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு நிறைந்திருக்கிறது. குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.