19.6.2014 அன்று குரு பகவான் உங்கள் இராசிக்கு சப்தம ஸ்தானமான 7-ம் இடத்திற்கு குடிபுக போகிறார். இதுவரையில் சப்தமே இல்லாமல் அடங்கி அமைதியாக இருந்த நீங்கள், சப்த நாடியும் புத்துணர்ச்சி பெற்று மகிழ்ச்சியோடு இருக்கப்போகிறீர்கள். 7-ம் இடத்தில் உச்சமாக இருக்கும் குரு பகவான், உங்கள் இராசிக்கு 12-ம் இடம், 3-ம் இடம் ஆகியவற்றின் அதிபதி ஆவர். அதாவது விரயாதிபதி, கீர்த்தி ஸ்தானாதிபதி ஆவார். அவர் சப்தமத்தில் அமர்ந்து உங்கள் இராசிக்கு கீர்த்தி ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும் பார்வை செய்வதோடு மட்டுமல்லாமல், உங்கள் ஜென்ம இராசியையும் பார்வை செய்வதால், இந்த இடங்கள் எல்லாம் ரீசார்ஜ் ஆகிவிட்டது.
இதுவரை இருட்டறையில் அடைப்பட்டிருந்த வண்டு, ஜன்னலை திறந்ததும் வெளியே பறந்தோடியது போல், பிரச்னைகள் எல்லாம் பஞ்சு போல் பறந்து விடும். உறவினர்களிடம் வாங்கிய கடன் சுமை தீரும். உறவினர் மனகசப்பு அகலும். திருமண வாய்ப்பு சிலருக்கு அமையும். பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பும், திருமணம் அமையவில்லையே என்று கவலைப்பட்ட பெற்றோர் மனதில் சுபச்செய்தி சங்கீதமாக இசைக்கும். வேலை வேலை என்று தேடி திரிந்து அலைந்து கொண்டு இருந்தவர்கள் நல்ல இடத்தில் வேலையில் அமர்வீர்கள். அலைச்சல் குறையும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். கடன் தொல்லை சற்று குறைந்துவிடும். பெற்றோர் உதவி சிலருக்கு கிட்டும். சிலருக்கு நண்பர்களிடத்தில் விரோதம் ஏற்படலாம், எல்லாம் பணத்தால்தான் என்று சப்தம குரு சொல்லுகிறார்.
ஜென்மத்தை குருபார்வை செய்வதால், முக்கியமான திட்டங்கள் நிறைவேறும். சரி. 7-ம் வீட்டில் இருக்கும் குரு பகவான் சொல்லும் ஆலோசனை என்னவெனில், “திருமணமானவர்கள் கருத்து வேறுபாடு இல்லாமல் இருங்கள். நண்பர்களோடும் பகை வேண்டாம். படிக்காமல் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட வேண்டாம்“ என்கிறார். கணபதியையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்குங்கள். அஷ்டலஷ்மிகளின் அருட்பார்வை பெறுவீர்கள். குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.