கருணா அம்மானின் பிரிவு - Part 2


முதலாம் பாகம் Click here 

2004.01.01 அன்று கிழக்கில் நடந்த வருடப்பிறப்பு வைபவத்தில் படையணிகள் மத்தியில் கருணா அம்மான் உரையாற்றும் போது  "எனக்கு தலைவருடன் சேர்ந்து கொஞ்சவேலைகள் இருக்கின்றது இனி உங்களை 'ரோமியோசேரா' (கேணல் ரமேஷ் ) தான் வழிநடத்துவார் " என்று கூறினார் இதன் கருத்து என்னவென்றால் விடுதலைப்புலிகளின் இராணுவ கட்டமைப்பில்  தலைவர் பிரபாகரன் பாரிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்த இருந்தார் . இதன் அடிப்படையில் தமிழீழ கூட்டுப்படைத்தளபதியாக  கேணல் கருணா நியமிக்கப்பட இருந்தார் .  இது இவ்வாறு நிகழுமாயின் புலிகளின் இரண்டாம் நிலைக்கு கருணாவே வரக்கூடிய வாய்ப்பு இருந்தது . ஆனால் புலிகளின் முக்கிய மூன்று தளபதிகள் மத்தியில் இரண்டாம் நிலைத் தளபதிகளுக்காக பனிப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்தது . உதாரணமாக பொட்டம்மான் தலைமையில் ஒன்றுகூடல் வைத்தால் கடற்புலிகளின் தளபதி சூசை செல்லமாட்டார் . ஏனெனில் சூசை பொட்டம்மானுக்கு கீழ்ப்பட்டவராக  வந்து விடுவார் என்று . இதே போன்று சூசையினால் ஒருங்கிணைக்கப்பட்ட கலந்துரையாடலுக்கு பொட்டம்மான் செல்லமாட்டார் . இதற்கெ ல்லாம் ஆப்பு வைத்தாற்போல சமாதான காலத்தில்  தலைவர் வந்து உரையாற்றவிருந்த கலந்துரையாடலில் தலைவருக்குப் பதிலாக கருணாம்மான் வந்து உரையாற்றியது மற்றைய தளபதிகள் மத்தியில் மனக்கசப்பை ஏற்படுத்தியிருந்தன .



இனி கேணல் கருணாவின் பிரிவிற்கான காரணத்தை பார்ப்போம் .
மட்டு அம்பாறை மாவட்டங்களில்  நிதியை கையாள்வதில் பல குறைபாடுகள் இருந்து வந்தது , தமிழ் முஸ்லிம் வர்த்தகர்கள் அரச உத்தியோகத்தர்கள் என அனைத்துப் பகுதியினரிடமும் வரி அறவிடப்பட்டது . வர்த்தகர்கள் கடத்தப்பட்டு வரி அற விடப்பட்டதுமுண்டு.  இவ்வாறு முறைகேடாக நடைபெற்ற கப்பம் , வரி சம்பந்தமாக பல எதிர்ப்பு கடிதங்கள் வன்னிக்கு சென்றதால் , வன்னியில் இயங்கிய தலைப்பீடம் கிழக்கில் இயங்கிய புலிகளுக்கு இனி மக்களிடமிருந்து வரி அறவிட வேண்டாம் , உங்கள் செலவுக்கு வேண்டிய பணம் தலைமைச் செயலகத்தால் வழங்கப்படும்  என்று கூறியிருந்தனர் .

இக்காலப் பகுதியில் கிழக்கில் விடுதலைப்புலிகளின் முதலீட்டுப் பொறுப்பாளராக இருந்தவர் குகநேசன் என்பவர் . இவரின் கீழ் வேலை செய்தவர்தான் கம்சன்.  கம்சன் நிதிப்பிரிவில் இருந்த காலத்தில் அனுமதியில்லாமல் தனிப்பட்ட முறையில் சொத்துக்களை வாங்கியிருந்தார் , இதனை கிழக்கில் இருந்த புலிகள் உறுத்திபடுத்தி அதனை முடக்கியவேளை , கம்சன் பல கணக்குகள் அடங்கிய கோவைகளுடன்  கருணா அம்மானுக்கு தெரியாமல் வன்னிக்கு சென்றார் , அவர் வன்னி சென்று காட்டிய கணக்குகள் கோவைகள் அடங்கிய  கோவைகள் புலிகளின் நிதிப்பொறுப்பாளர் தமிழேந்திக்கு புதுமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது .

வன்னியில் உயர்மட்ட தளபதிகள் ஒன்றுகூடி கம்சனால் கொண்டுவரப்பட்ட கணக்குகளில் பல இடங்களில் தமது அதிருப்தியை காட்டினர் . அத்துடன் முடக்கப்பட்ட கம்சனின் சொத்துக்களை மீண்டும் கம்சனிடம் கொடுக்கும் படியும் கேணல் கருணாவை உடனடியாக வன்னிக்கு வருமாறும் தலைமைப்பீடத்தால் கூறப்பட்டது . இதன் உள் நோக்கத்தை புரிந்துகொண்ட கருணா அம்மான் உசாராகி வன்னிக்கு செல்வதை தவிர்த்துகொண்டார் .

தன்னுடைய சொல்லில் நம்பிக்கை வைக்காது கம்சனின் கருத்தை தலைமைப் பீடம் நம்பியதால் கருணாம்மான் மனமுடைந்ததாக சரணடைந்த போராளிகள் கூறினர் .  அதே வேளை புலிகளின் தலைமை திருகோணமலை மாவட்ட சிறப்பு தளபதியான பத்துமணி தந்திரமாக வாணிக்கு அழைத்து சிறையில் போட்டனர் . பின்னர் இறுதி யுத்த காலங்களில் இவரை வெளியில் விட்டனர் . பின்னர் இவர் இராணுவத்திடம் சரணடைந்தார் . கேணல் கருணா வன்னியுடனான தொடர்பை துன்னிக்கவிருந்த செய்தி கேணல் பதுமனுக்கு தெரிந்திருந்தும் வன்னித் தலைமைப் பீடத்திற்கு தெரியப்படுத்தாதது அவர் மேலிருந்த குற்றமாகும் . கேணல் கருணாவின் பிரிவைத் தொடர்ந்து விடுதலை புலிகளின் இராணுவப் பலமானது 60 சதவீதத்தால் குறைந்தது .

மேலும்  கருனாம்மானின் மனைவி (நிறா ) வன்னியிலிருந்த காலத்தில் கிழக்கிலிருந்த கருனாம்மானுடன் தொலைத்தொடர்பு சாதனத்தில் கதைத்த சம்பாசனைகள் அனைத்தும் தலைமைப்பீடத்தால் ஒட்டுக்கேட்க ப்பட்டன. இந்த விடயத்தை அவரின் மனைவி கருணாம்மானிற்கு தெரியப்படுத்தி இருந்தார் . இவையனைத்தும் அந்தக்காலத்தில் மனக்கசப்பை ஏற்படுத்தியிருக்கலாம் .

கருணாவின் பிரிவானது உலகத் தமிழர்களாலும் வடகிழக்கில் வாழும் தமிழர்களாலும் நம்பமுடியாத செய்தியாக இருந்தது . ஒரு கட்டத்தில் கருணா அம்மான் தலைவர் பிரபாகரனிடம் சென்று தன்  நிலையை கூறி மன்னிப்பு கோரவிருந்தார் , ஆனால் கிழக்கிலிருந்த  மற்றைய தளபதிகள் தடுத்தி நிறுத்தினர் .  இதனால் கருணா அம்மான் சில நாட்கள் குழப்ப நிலையில் காணப்பட்டார்  . தனது நிலையை டொக்டர் அன்ரி என அழைக்கப்படும் திருமதி பத்மலோயினி கரிகாலனிடம் கூறியும் கவலைப்பட்டுள்ளார் . இது இவ்வாறிருக்க வன்னியிலுள்ள தளபதிகள் கொதித்தெழுந்தனர் . கருணாவை கொல்லவேண்டுமென கோசமெழுப்பினர் . ஆனால் பிரபாகரனின் மனநிலை சற்று வித்தியாசமாகவே இன்றைக்கு கருணா வந்தாலும் அவனை நான் மன்னிப்பேன்"என்று கூறினார்  ஏனெனில் இந்திய இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது புலிகள் ஒரு கட்டத்தில் ஆயுத தளபாடங்கள் இல்லாத வேளையில் கேணல் கருணா தன்னிடமுள்ள ஆயுதங்களை வன்னிக்கு அனுப்பி தலைவரின் கரங்களை பலப்படுத்தியதை பிரபாகரன் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார் .
இருந்தது "

மட்டு அம்பாறை மாவட்டத்தை கேணல் கருணாவின் பிடியில் இருந்து மீட்க புலிகள் திட்டம் போட்டனர் . கேணல் கருணாவின் படையணிகளில் இருந்து விலகி வன்னிக்கு வந்த தளபதிகளான கேணல் ரமேஷ், கேணல் பிரபா மற்றும் வன்னியில் நிலைகொண்டிருந்த 600 ற்கு மேற்பட்ட ஜெயந்தன் படையணிகளுடன் சாள்ஸ் அன்ரனி படையணியும் இணைந்து கொண்டது .
இதில் தளபதி ரமேஷ் கிழக்கில் இரண்டாம் நிலை தளபதியாக இருந்தவர். கேணல் கருணாவின் பிரிவை முதன் முதலில் ஆதரித்தவரும் இவரே, அத்துடன் அதிகளவு பிரிவினைவாதத்தை போராளிகள் மத்தியில் கூறி கருணா பிரிந்தது சரி என்று அடித்து கூறியவர் . ஆனால் எதிர்பாராத விதமாக வன்னி நோக்கி சென்றுவிட்டார் . இதனால் கேணல் கருணா அணியினர் தளபதி ரமேஸை  துரோகியாகவே பார்த்தனர் . வன்னி சென்ற ரமேசிற்கு தலைமைப்பீடம் கேணல் பட்டம் வழங்கியதுடன் 15.07.2004 அன்று கிழக்கு பிராந்திய தளபதியாக நியமிக்கப்பட்டார் .

புலிகள் சிறிது சிறிதாக ஆயுதங்களை வன்னியில் இருந்து வெருகலாற்றுப் பகுதிக்கு நகர்த்தினர், வெருகலாறானது  மட்டக்களப்பு பகுதியையும் திருகோணமலை பிரிக்கும் ஆறாகும் . ஆற்றின் மறுகரையில் கேணல் கருணாவின் விசுவாச படையணியும் ஆயுத தளபாடங்களுடன் வன்னிப்படியணியை எதிர்கொள்ளத் தயாராகினர் . புலிகளின் தலமைப்பீடத்திற்கு கருணாவுடன் இருக்கும் போராளிகள் மூர்க்கமானவர்கள் அவர்களை தந்திரமாகவே வெல்ல வேண்டும் என நன்கு தெரியும் . அத்துடன் கேணல் கருணாவில் இருக்கும் மற்றைய தளபதிகளுடன்  வன்னிப் புலிகள்
தொடர்பை ஏற்படுத்தி அவர்களது மனநிலைகளை மாற்றி வைத்திருந்தனர் .

கருணாவின்குழு எதிர்பாரத வகையில் கதிரவெளிப்பகுதியில் வன்னிப் புலிகளால் பாரிய தரையிறக்கம் செய்யப்பட்டு அதிர்ச்சியான தாக்குதல் ஒன்றை அவர்கள் மீது தொடுத்து அவர்களை சரணடைய வைத்தனர். இதில் வன்னியிலிருந்து வந்த புலிகளுக்கும் கருணா அணியினருக்குமிடையில் பாரிய சமர் மூண்டது . இதில்  கருணா அணியின் 98 போராளிகள் மரணமடைந்தனர் . இறந்தவர்களில் அதிகமானோர் பெண் பிள்ளைகளாவார் . கருணா அணியின் மகளீர் படையணியை வழி  நடத்திய இராசாத்தி என்பவர் புலிகளால் கைது செய்யப்பட்டு சித்திரைவதையின்  பின்னர் கொல்லப்பட்டார். கேணல் கருணா தொப்பிக்கலை காட்டிவிட்டு இலங்கை அரசாங்கத்துடன் இணைய முன்  தன்னிடமுள்ள போராளிகளை எல்லாம் வீடு செல்லுமாறு கூறிவிட்டு முக்கிய தளபதிகளுடன் தென்னிலங்கை நோக்கி  தப்பிச்சென்றார் .

கேணல் கருணாவுடன் சென்ற மூத்த புலி உறுப்பினர்களான ஜிம்கலிதாத்தா , ராபட்,துரை , விசு,கடாபி மாஸ்ரர்,சுதா,நிஷா,அக்கினோ ,ஈஸ்வரநாதன் , திருமால் ஆகியோர் பின்னர் புலிகளிடம் சரணடைந்தனர் . ஆனால் பொட்டம்மானின் தன்னிச்சையான முடிவினால் அவர்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர் .  இவர்கள் அனைவரும் சரணடைய முன்னர் கிழக்கில் உள்ள கேணல் ரமேசுடன் தொடர்புகொண்டவேளை  ரமேஸ் " எனது மூத்த பிள்ளையின் மீது ஆணையாக உங்களை சுடமாட்டேன் நீங்கள் வந்து சரணடையுங்கள் " எனக் கூறினார் . ஆனால் புலிகளிடம் சரணடைந்த அனைத்து கிழக்கு தளபதிகளும் சுட்டு கொல்லப்பட்டதற்கு கேணல் ரமேசிட்கு  முக்கிய பங்குண்டு .  சரணடைந்த கிழக்கு புலிகளின் தளபதிகள் வன்னி சென்றால் கேணல் கருணாவின் பிரிவின் போது தளபதி ரமேஷின் பங்கு எப்படி இருந்தது என்று கூறியிருப்பார் . மேலும் சரணடைந்த தளபதிகள் அனைவரும் கிழக்கு மாவட்ட தளபதியாக இருப்பதற்கு தகுதியானவர்கள் . இதனால் பதவிப் போட்டிகள் ஏற்படும் இவை அனைத்தையும் கருத்தில் வைத்து அனைத்து சரணடைந்த தளபதிகளும் கிழக்கில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர் .

வன்னியில் பின்னர் கிழக்கு மாகான போராளிகளை கௌரவிக்கும் விழாவில் புலிகளின் தலைவர் கேணல் ரமேஷை பார்த்து " சண்டைக்கான ஒரு சந்ததியினரையே அளித்து விட்டீர்களே "  என்று கேட்டார் . இதே காலப்பகுதியில் தான் கேணல் கருணாவுடன் சென்ற பெண் போராளிகளான நிலாவினி,சாளிமற்றும் இரண்டு போராளிகள் புலிகளிடம் சரணடைய , புலிகளால் அவர்கள் சிறையிலடைக்கப்பட்டு   பின்னர் இறுதியுத்த காலப்பகுதியில் அவர்கள் சக புலிகளால் சுடப்பட்டு கொல்லப்பட்டனர் .

கருணாவின் குழுக்களுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் பல்வேறு சண்டைகள் இடம்பெற்றன . கிழக்கில் புலிகள் இராணுவத்திற்கு எதிரான தாக்குதலைவிட  கருணாவின் குழுவிற்கு எதிராக தாக்குதல் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர் , மேலும் கருணா அணியிலிருந்த உறுப்பினர்கள்  நேரடியாக இராணுவத்துடன் சேர்ந்து புலிகளுக்கு எதிராக யுத்தத்தில் இறங்கினர் . வாகரையைப் பிடிக்கும் சண்டையின்போது புலிகளால் கைப்பற்றப்பட்ட இராணுவ உடல்களில் கருனாக்குழு உறுப்பினர்களது சடங்கள் காணப்பட்டதாக சரணடைந்த போராளிகள் கூறினர் .


கேணல் கருணாவின் பிரிவை தொடர்ந்து புலிகளால் எந்தவொரு வெற்றிகரமான தாக்குதல்களும்  மேற்கொள்ளப்படவில்லையென்பது
குறிப்பிடத்தக்கதாகும் . கருணா அம்மானின் பிரிவு சரியா ? பிழையா ? என்பதை நான் கூறவரவில்லை ஆனால் அவரின் பிரிவின் பின் விடுதலைப்புலிகள் இயக்கம் அழிந்தது என்பதுதான்  உண்மை . புலிகளின் தலைமைப்பீடம் தங்களது பலம் , பலவீனத்தை சரியாக புரிந்திருந்தால் வேறுவழிகளில் கருணா அம்மானை அணுகியிருக்கலாம்.

"ஈழத்தின் வலி "
DR. மகேஸ்வரன் உமாகாந்
விரிவுரையாளர் (மருத்துவம் )

இந்த கட்டுரை பற்றி உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் .