(எம்.ஏ.றமீஸ்)
அக்கரைப்பற்று பாயிஸா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு விழா இன்று(14) அக்கரைப்பற்று அதாஉல்லா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் எம்.ஏ.ஏ.இஸ்ஸடீன் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டு விழாவில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன, கிராமிய மின்சார அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.றாசிக், அக்கரைப்பற்று கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஏ.எஸ்.அஹமட் கியாஸ், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யூ.எல்.ஹாஜா முகைடீன், கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அப்துல் கபூர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
சபா,மினா,அறபா ஆகிய இல்லங்களிடையே நடைபெற்ற மைதான மற்றும் பெரு விளையாட்டு போட்டிகளின் அடிப்படையில் 438 புள்ளிகள் பெற்ற மினா இல்லம் இவ்வாண்டுக்கான சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது. 424 புள்ளிகள் பெற்ற சபா இல்லம் இரண்டாமிடத்தினையும், 377 புள்ளிகள் பெற்ற அறபா இல்லம் மூன்றாமிடத்தினையும் பெற்றுக் கொண்டது.
மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகளின் அடிப்படையில் 360 புள்ளிகள் பெற்ற சபா இல்லம் மெய்வல்லுநர் சம்பியனாகவும், 345 புள்ளிகள் பெற்ற மினா இல்லம் இரண்டாமிடத்தினையும், 333 புள்ளிகள் பெற்ற அறபா இல்லம் மெய்வல்லுநர் போட்டியில் மூன்றாமிடத்தினையும் பெற்றுக் கொண்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா குறிப்பிடுகையில், பிறக்கும் போது எவரும் பதவிகளுடனோ அல்லது உயர்ந்த அந்நஸ்த்துடனோ பிறப்பதில்லை. யார் சிறந்த எண்ணங்களுடனும், திறமையான செயற்பாடுகளின் அடிப்படையிலும் வாழ்கின்றாறோ அவர் பிற்காலத்தில் உயர் பதவிகளுடனும், சிறந்த அந்தஸ்துடனும் சிறந்து விளங்குவார்.
நாங்கள் மக்களுக்காகவும் சமூகத்திற்காகவும் நல்லது நினைத்து செயற்பட்டதனால் காலம் தாழ்த்தியேனும் பல வெற்றிகளை பெற்றிருக்கின்றோம். எப்போதும் நாங்கள் எண்ணுகின்ற விடயத்தில் தூய்மை இருக்க வேண்டும். பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்படும்போது நாம் நிச்சயம் எதிர்பார்த்த இலக்கினை எட்டிக் கொள்ள முடியும்.
எந்த ஒரு விடயத்தினையும் ஒற்றுமையுடனும் கூட்டுப் பொறுப்புடனும் செய்கின்றபோது அதில் நிறைவும் அழகும் இருக்கும். இந்த நியதிக்கு அமைவாக இப்பாடசாலை மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஒற்றுமைப்பட்டுச் செயற்பட்டதனால் சிறந்ததும் முன்மாதிரியானதுமான விளையாட்டு விழாவினை பலர் புகழத்தக்கதாக நடத்த முடிந்திருக்கிறது என்றார்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4