ஆலயத்திற்குச் சொந்தமான விடுதியில் ஒருவர் சடலமாக மீட்பு

(எம்.ஏ.றமீஸ்)
அக்கரைப்பற்று 08ம் பிரிவில் அமைந்துள்ள தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்திற்குச் சொந்தமான விடுதியில் நேற்று(24) நஞ்சருந்திய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

அக்கரைப்பற்று கண்ணகிபுரம்-02, நல்லதம்பி வீதியைச் சேர்ந்த எம்.சாமூவேல் ஜெயராஜ்(30) என்பவரே உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த பல வருடங்களாக மேசன் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.



தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற தனது மகன் அக்கரைப்பற்று பாடசாலையொன்றில் கற்று வருவதால் அவரை பிரத்தியேக வகுப்பிற்குச் சென்று வருவதற்கு வசதியாக தேவாலயத்திற்குச் சொந்தமான விடுதியில் பகல் நேரங்களில் தங்க வைப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த விடுதியறையொன்றிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றுமுன்தினம் காலை 7 மணியளவில் தன்னை அக்கரைப்பற்று தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக கொண்டிறக்கி விட்டு சென்றவர் இரவு வரை வீடு திரும்பாததால் நாம் அவரை பல இடங்களிலும்  தேடிய  பின்னர் மறுநாள் காலை அடுத்த வீட்டுக்காரர் கொடுத்த தகவலின்படி பயணப் பொதியுடன் கணவர் சென்றதாக அறிந்தேன். இதன் அடிப்படையில் சில வேளை இவர் ஆலய விடுதிக்கு சென்றிருக்கலாம் என்று இங்கு வந்து பார்த்த போது மூடிய அறையில் நஞ்சருந்திய நிலையில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன் என இறந்தவரின் மனைவி தெரிவித்தார்.

இது பற்றிய மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு பெண்ணோடு தான் வைத்திருந்த தொடர்பு தற்போது சிலருக்கு தெரிய வந்துள்ளதால் அவமானம் தாங்கிக் கொள்ள முடியாமல் மேற்படி நபர் தற்கொலை செய்திருக்கலாம் என தான் சந்தேகிப்பதாக இறந்தவரின் மனைவி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.